/indian-express-tamil/media/media_files/BVS4XSeVrsjFlCZhr6Mz.jpg)
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் சிப்காட்டில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணிபுரியும் 1,200 தொழிலாளர்கள் கடந்த 9 ஆம் தேதி முதல் ஆலைக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் அதிக சம்பளம், பணிநேரம் குறைப்பு மற்றும் ஆலையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் அமைப்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர்.
கைது
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், அவர்கள் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் மற்றும் பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சாம்சங் நிர்வாகம் தெரிவித்தது. இருப்பினும் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தொழிலாளர்கள் பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுப்பட்ட வந்த சூழலில், அந்த பந்தல் இரவோடு இரவாக போலீசாரல் அகற்றப்பட்டுள்ளது. மேலும், சாம்சங் தொழிலாளர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்ற போலீசார், 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இந்நிலையில், பந்தல் அகற்றப்பட்டாலும் அதே இடத்தில் அமர்ந்து கொட்டும் மழையிலும் தொழிலாளர்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், சாம்சங் நிறுவனத்திற்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சி.ஐ.டி.யு தலைவர் சௌந்தரராஜன் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் 5-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளில் அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் சொந்த பிணையில் ஊழியர்களை போலீசார் உடனடியாக விடுவித்தனர்.
இந்த நிலையில், சாம்சங் ஊழியர்களுக்கு கைதுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இ.பி.எஸ் கண்டனம்
போலீசாரின் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள, தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிலாளளர்-நிறுவனம்-அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முழுமையான தீர்வு எட்டப்படாத நிலையில், அரசு தரப்பில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வழங்கப்பட, தொழிலாளர்கள் அதனை முற்றிலுமாக மறுத்து போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை பேருந்துகளில் ஏறி, காவல்துறையினர் சாம்சங் தொழிலாளர்கள் இருக்கிறார்களா என்று சோதனையிட்டதாகவும், நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்திருப்பதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து நான் நாள்விடாது சுட்டிக்காட்டி வருகிறேன். அத்தகு குற்றங்களைச் செய்தவர்களை பிடிப்பதில் விடியா திமுக அரசு காட்டாத முனைப்பை, நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவதில் காட்டுவது ஏன் போராட்டங்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவைக்க திராணியின்றி, அடக்குமுறையால் ஒடுக்க முயலும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
உழைப்பாளர் தினத்தன்று மட்டும் சிகப்பு சட்டை போட்டுகொண்டு, "நானும் தொழிலாளி" என்று மேடையில் மட்டும் முழங்கும் மு.க ஸ்டாலின் சிகப்பு சட்டை மீது உண்மையிலேயே மதிப்பிருக்குமாயின், இதுபோன்ற ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக விடுவிப்பதுடன், தமிழக அரசு மீண்டும் தலையிட்டு, தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உரிய பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்க்குமாறு வலியுறுத்துகிறேன்." என்று அவர் கூறியுள்ளார்.
பா. ரஞ்சித் கண்டனம்
இயக்குநர் பா. ரஞ்சித் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "தொழிற்சங்கம் என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமையாகும். இப்படி தொழிற்சங்கம் வேண்டியும், சிறந்த பணிச்சூழலுக்காகவும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் தங்களது சட்டப்பூர்வ உரிமைகளுக்கு உட்பட்டு வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.
தமிழக அரசு இதை மதிக்காமல், தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொள்வது மிக மோசமான அனுகுமுறை. தொழிலாளர்கள் அமைதியான முறையில் வேலைநிறுத்தம் செய்து வரும் போராட்டக்களத்தை அரசு அகற்றுவதில் எந்த நியாயமும் இல்லை. தொழிலாளர்களை இவ்வாறு கைது செய்வது அரசியலமைப்பிற்கு முரணானது, மேலும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கு காவல்துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கப்பட வேண்டியதாகும். தமிழக அரசே! தங்கள் உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு!" என்று பதிவிட்டுள்ளார்.
திருமாவளவன்
தொழிற் சங்கம் அமைக்க உரிமை, 8மணி நேர வேலை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் சாம்சங் தொழிலாளர்களை அண்ணன் கே.பாலகிருஷ்ணன், இரா. முத்தரசன், கே.வி.தங்கபாலு, அப்துல் சமது உள்ளிட்ட தோழமை இயக்க தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினோம்.
"அமைதியான வழியில் போராடுகிற தொழிலாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருப்பதும், சிலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதும் வருத்தமளிக்கிறது. கைது செய்யப்பட்டிருக்கும் தொழிலாளர்களை உடனடியாக நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும். அனைத்து வழக்குகளையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இந்த பிரச்சனையில் முதல்வர் அவர்கள் உடனடியாகத் தலையிட வேண்டும். விரைவில் தோழமை கட்சித் தலைவர்கள் முதல்வர் அவர்களை சந்தித்து இக்கோரிக்கைகளை வலியுறுத்தயிருக்கிறோம்.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்று காரணம் காட்டாமல் அரசு நேரடியாக முடிவெடுக்க முடியும். அப்படி முடிவு எடுத்தால் அந்த வழக்கு செயலிழந்து போகும். அரசுக்கு அதிகாரம் இருக்கிறது, தொழிலாளர் நலத்துறை இணை ஆணையருக்கு, பதிவாளர் என்கிற பொறுப்பு இருக்கிற ஆணையருக்கு அதிகாரம் இருக்கிறது. ஒரு சங்கத்தை பதிவு செய்வதற்கு அது சட்டபூர்வமானது சனநாயக பூர்வமானது. அதில் அதிகாரிகளுக்கு என்ன தயக்கம். இதுதான் இங்கே பிரச்சனையின் மூலமாக இருக்கிறது. அரசு அதிகாரிகளிடம் இருக்கிற இந்த தயக்கத்தை தவிர்த்து அல்லது தேக்கத்தை உடைத்து சங்கத்தை பதிவு செய்வதற்கு முன்வர வேண்டும். 17 ஆண்டுகளாக இந்நிறுவனத்தில் தொழிற்சங்கம் வைக்க அனுமதிக்காததே. ஒரு அடக்குமுறை தான்.
சாம்சங் நிறுவனத்திற்கு நாங்கள் எதிராக இல்லை. ஆனால், அதன் அடக்குமுறை போக்குக்கு எதிராக இருக்கிறோம். பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டுக்கு எதிராக இல்லை. ஆனால், அவர்கள் தொழிலாளர்களை சுரண்டுவதை எதிர்க்கிறோம். சங்கம் வைத்துக் கொள்வதற்கு சனநாயகப்பூர்வமான உரிமை இருக்கிறபோது அதை அரசு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்." என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.