சென்னை, சாம்சங் தொழிற்சாலை, காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ளது. பணியாளர்களில் ஒரு பிரிவினர், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தை அங்கீகரிப்பது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 2024 செப்., 9 முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டு, அக்., 21 முதல் பணிக்கு திரும்பினர்.
சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தை பதிவு செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஜன., 25ல், 'சாம்சங் இந்திய தொழிலாளர்கள் சங்கம்' அங்கிகரிக்கப்பட்டதாக, தொழிலாளர் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில் போட்டி கடிதத்துடன் சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் ஆலையை முற்றுகையிட்டு சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊழியர்கள் 23 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாம்சங் ஊழியர்கள் தொழிற்சாலை முன்பு வேலை கேட்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சாம்சங் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக தொழிற்சங்க ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இனி போராட மாட்டோம் உள்ளிட்ட நிபந்தனைகளை உள்ளடக்கிய கடிதத்தில் கையெழுத்திட ஊழியர்களை நிர்வாகத்தினர் வலியுறுத்தினர்.
சாம்சங் நிரவாகத்தின் நிபந்தனை கடிதத்தில் கையெழுத்திட மறுத்து போட்டி கடிதத்துடன் வந்த ஊழியர்கள் பணிக்கு வர தயாராக இருக்கிறேன் என்ற கடிதத்துடன் சாம்சங் தொழிலாளர்கள் ஆலை முன்பு குவிந்தனர்.