சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெங்கு, கொரோனா, மலேரியாவை எதிர்க்க கூடாது அவற்றை அழிக்க வேண்டும். அதே போல் சனாதனத்தையும் அழிக்க வேண்டும் என்று பேசினார். இது நாடு முழுவதும் பேசு பொருளானது. சிலர் இதற்கு வரவேற்பு தெரிவித்தும், சிலர் இக்கருத்துக்கு விமர்சனமும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பா.ஜ.க, இந்து அமைப்பினர் உதயநிதியின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய பா.ஜ.க அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா உள்பட பலரும் உதயநிதியின் கருத்துக்கு விமர்சனம் செய்துள்ளனர்.
அயோத்தி சாமியார் உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி அறிவித்து கொலை மிரட்டல் விடுத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் ஹர்ஷ் குப்தா மற்றும் ராம் சிங் லோதி ஆகியோரின் புகாரின் பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. உதயநிதியின் கருத்துக்கு ஆதரவாக பேசிய கர்நாடக அமைச்சர் பிரியங் கார்கே மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராம்பூரில் உள்ள சிவில் சர்வீஸ் காவல் நிலையத்தில் தமிழகம், கர்நாடகா அமைச்சர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 295 A (வேண்டுமென்றே திட்டமிட்டு தீங்கிழைக்கும் செயல்களை செய்தல்), பிரிவு 153 A (இரண்டு மத குழுக்களுக்கு இடையில் வேண்டுமென்றே பகையைத் தூண்டுதல்) ஆகிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“