Advertisment

சனாதனம் சர்ச்சை பேச்சு: உதயநிதிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

சனாதன சர்ச்சை பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது தொடர்பாக தமிழ்நாடு அரசும் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

author-image
WebDesk
New Update
Udhaya

சனாதனம் சர்ச்சை பேச்சு: உதயநிதிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் செப்டம்பர் 2-ம் தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதநிதி ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார். சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி, “இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம். எனவே, இந்த மாநாட்டுக்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள்” என்று கூறினார்.

Advertisment

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது, தேசிய அளவில் பெரும் சர்ச்சையானது. பா.ஜ.க மூத்த தலைவர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பா.ஜ.க-வினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பலரும் உதயநிதி ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், சனாதன ஒழிப்பு மாநாட்டில், இந்தியாவில் வாழும் கோடிக்கணக்கான இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியுள்ளனர். உதயநிதி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சனாதன ஒழிப்பு மாநாட்டு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு கலந்துகொண்டதை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும். சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இந்த நிகழ்ச்சி நடத்தியதன் பின்னணியில் ஏதேனும் சதி உள்ளதா என்பது குறித்து கண்டறிய சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ஜெகநாதன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், செப்டம்பர் 2-ம் தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாடு குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவிட வலியுறுத்தியும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் பேலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஏன் உயர்நீதிமன்றத்தை அணுகவில்லை என மனுதாரர் பி.ஜெகநாத்திடம் கேள்வி எழுப்பினர்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  “இது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக ஒரு தனி நபர் பேசியதாக இருந்தால் அதை புரிந்து கொள்ள முடியும். ஆனால், இங்கே ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக ஒரு அமைச்சரும் அரசு இயந்திரமும் கட்டவிழ்த்து விடப்படுகிறது” என்று வாதிட்டார்.

இதைக் கேட்ட நீதிபதிகள் அமர்வு, அவரிடம்,  “நீங்கள் எங்களை காவல் நிலையமாக மாற்றுகிறீர்கள்” என்று கூறினர்.

எவ்வாறாயினும், வெறுப்பூட்டும் பேச்சு தொடர்பான இதே போன்ற பிரச்சினைகள் நிலுவையில் உள்ளதால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

வழக்கறிஞர் ஜெகநாத் தாக்கல் செய்த மனுவில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க தலைவர்கள் பீட்டர் அல்போன்ஸ், ஆ. ராஜா, தொல். திருமாவளவன் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கு எதிராக, சனாதன தர்மம் அல்லது இந்து மதத்திற்கு எதிராக மேலும் வெறுப்புப் பேச்சு நடத்த தடை விதிக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.

சென்னையில் செப்டம்பர் 2, 2023-ல் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில், மாநில அமைச்சர்கள் பங்கேற்றது அரசியலமைப்பிற்கு எதிரானது, அரசியலமைப்பின் 25, 26-வது பிரிவுகளை மீறியதாக அறிவிக்க வேண்டும் என்று ஜெகநாத் தனது மனுவில் கோரியுள்ளார்.

மேலும், கர்நாடகாவின் ஹிஜாப் வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் இந்து தர்மத்துக்கு எதிரான இந்த மாநாடுகள் எதுவும் நடைபெறக் கூடாது என்ற தீர்ப்பின்படி, சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி வழங்கியது, அந்த மாநாட்டுக்கு காரணமான குற்றவாளிகள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாநில காவல்துறை தலைமை இயக்குநருக்கு உடனடியாக உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளனர்.

உச்சநீதிமன்றத்தின் 2018-ம் ஆண்டு தீர்ப்பின்படி வெறுப்புப் பேச்சுக்கு ஒரு கண்காணிப்பு அதிகாரியை உடனடியாக நியமிக்குமாறு தமிழக அரசின் உள்துறைச் செயலர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநருக்கு உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டது.

ஒரு குறிப்பிட்ட மதத்தை ஒழிப்பதற்காக இதுபோன்ற மாநாடுகளை நடத்துவதற்கு தமிழக காவல் துறை அனுமதி வழங்கியதா என்பது தெரியவில்லை என்று மனுதாரர் வாதிட்டார்.

“காவல்துறை உண்மையிலேயே அனுமதி வழங்கியிருந்தால், இத்தகைய மாநாடுகளுக்கு அனுமதி வழங்குவதில் காவல் துறைக்கு அரசியல் தலையீடு இருந்ததா என்பதை இந்த நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அவர்களுக்கு உள்ளது. அனுமதி வழங்கப்படவில்லை என்றால், இன்று வரை மாநாட்டு ஏற்பாளர்கள் கைது செய்யப்படாமல் இருப்பது எப்படி” என்று அந்த மனுவில் கேட்கப்பட்டுள்ளது.

சனாதன தர்மத்திற்கு எதிராக எதிர்ப்புக் குரல்களைப் பதிவு செய்கிறோம் என்ற போர்வையில் சனாதன தர்மத்தை இழிவாகப் பேசும் கூட்டங்கள், மாநாடுகளை நடத்தும் இயக்கம் மாநிலத்தில் நடந்து வருவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

“இது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான அரச ஆதரவு மற்றும் ஆதரவுடன் பிரச்சாரம் செய்வதாகும் அரசே தவறான யோசனைக்கு நிதியுதவி செய்கிறது, இப்போது அவர்கள் இளைஞர்கள் மற்றும் மாணவர்களை தங்கள் கைகளில் எடுத்துள்ளனர்” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், சனாதன சர்ச்சை பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், சனாதன எதிர்ப்பு மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது தொடர்பாக தமிழ்நாடு அரசும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Udhayanidhi Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment