சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தி.மு.க அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையானது.
குறிப்பாக பா.ஜ.க, இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்பட பலர் உதயநிதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதே சமயம் பலர் ஆதரவும் தெரிவித்தனர். இருதரப்பில் இருந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், திராவிடக் கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு இன்று (நவ.6) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரித்த நீதிபதி, "சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை கடமை தவறிவிட்டது. எந்த கொள்கைக்கும் எதிராக பேசுவதற்கு நீதிமன்றம் அனுமதிக்காது. அதிகாரத்தில் உள்ளவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பேசும்போது, சாதி, மதம், கொள்கை ரீதியாக பிளவு ஏற்படாதவாறு கவனத்துடன் பேச வேண்டும்.
பொது மக்கள் மத்தியில் தவறான எண்ணங்களை உருவாக்குவதற்கான கருத்துக்களை பரப்புவதற்கு நீதிமன்றங்கள் உதவுமென யாரும் எதிர்பார்க்க முடியாது. குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்க வேண்டும் என பேசுவதற்கு பதில், மது, போதைப் பொருட்கள், ஊழலை ஒழிப்பதில் அமைச்சர்கள் கவனம் செலுத்தலாம்" என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். அதோடு திராவிடக் கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு தொடர்ந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“