தமிழகத்தில் அடுத்த 6 மாத காலத்துக்குள் அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மக்கள் நலன், இயற்கை வளம் மற்றும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்றும் புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.
இதனால் படிப்படியாக மணல் குவாரிகள் மூடப்பட்டு, தமிழகத்தில் ஒரு சில மணல் குவாரிகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இந்த நிலையில், மணல் குவாரிகளை மூட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து, மணல் குவாரிகளை ஏற்கனவே உத்தரவிட்டபடி மூட வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதில், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணிகள் அனைத்தும் ஆற்று மணலை நம்பியே நடைபெற்று வந்தன. உயர் நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பால் அனைத்து கட்டுமானப் பணிகளும் முழுமையாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல லட்சக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை இன்று விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், மணல் குவாரிகளை மூடுமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.