மணல் குவாரிகளை மூட பிறப்பித்த உத்தரவில் மாற்றமில்லை : ஐகோர்ட் உறுதி

மணல் குவாரிகளை ஆறு மாதத்தில் மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.

Imported Sand, Tamilnadu Government Affidavit
Imported Sand, Tamilnadu Government Affidavit

மணல் குவாரிகளை ஆறு மாதத்தில் மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.

மணல் குவாரிகள் மூலமாக தமிழகத்தில் கட்டுமானத் தேவைகளுக்கு மணல் சப்ளை ஆகிறது. மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள ஆற்று மணலை தமிழகத்தில் விற்க அனுமதி வழங்கவும், விற்பனைக்காக கொண்டுச் செல்லப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட மணலை திரும்ப ஒப்படைக்கக் கோரி புதுக்கோட்டை ராமையா எண்டர்பிரைசஸ் லிமிடெட் சார்பில் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஆர். மகாதேவன், ‘எதிர்கால சந்ததியினர் நலனுக்காக தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூட வேண்டும் . ஜல்லி, குவாரிகள் தவிர்த்து கிரானைட் குவாரிகள் மற்றும் பிற கனிம குவாரிகளை படிப்படியாக மூட வேண்டும் . மணல் தேவைக்கு வெளிநாடுகளிலிருந்து மணல் இறக்குமதி செய்ய வேண்டும்’ என்று கடந்த ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார் .

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட ஆட்சியர்கள், தாசில்தார் சார்பில் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மேல்முறையீடு மனு செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனியாக கனிமவளச் சட்டம் உள்ளது. இந்தச் சட்டத்தின்படி, உரிய அனுமதி பெறாமல் மணலை சேமித்து வைப்பதும், விற்பனை செய்வதும் குற்றமாகும். இதை மீறுவோர் மீது தமிழ்நாடு கனிமவள பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.

இந்த அதிகாரத்தின் அடிப்படையிலேயே வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை போக்குவரத்து உரிமம் இல்லாமல் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லவும், விற்பனை உரிமம் பெறாமல் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது. வெளிநாட்டு மணலை விற்கவும், வெளியே எடுத்துச் செல்லவும் அனுமதி கேட்டுதான் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி மனுதாரர் கோரிக்கை விடுக்காத நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூட உத்தரவிட்டு, புதிதாக மணல் குவாரிகளை திறக்கவும் தடை விதித்துள்ளார். இந்த உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு அரசிடம் கருத்து கேட்கப்பட வில்லை. ஆகவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்த உத்தரவை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

இந்த அப்பீல் வழக்கை நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது . அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ‘தமிழகத்தில் தற்போது மணல் விற்பனை ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. மேலும், அதனை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், கடந்த 4 மாதங்களாக தமிழகத்தில் சட்ட விரோத மணல் கடத்தல் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது . மேலும் இறக்குமதி செய்யப்பட்ட மணலானாலும், மாநில விதிகளுக்கு உட்பட வேண்டும்’ என தெரிவித்தார்.

மணல் இறக்குமதி நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘உரிய முறையில் அனுமதி பெற்ற பிறகே மணல் இறக்குமதி செய்யப்பட்டது. இதற்காக உரிய சுங்க கட்டணம் மத்திய அரசுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இறக்குமதி மணல் விற்பனைக்கு தமிழகத்தில் அனுமதிக்க வேண்டும்’ என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். தற்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் , சென்னை உயர் நீதிமன்றத்தில் அமர்ந்து வழக்குகளை விசாரித்து வருகின்றனர். இதையடுத்து, மதுரை கிளையில் விசாரித்த இந்த வழக்கின் தீர்ப்பை இன்று சென்னையில் வழங்கினர் . அந்த உத்தரவில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மூன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் தங்களின் தீர்ப்பில், அரசியல் அமைப்பு சட்டத்தில் அரசுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டப்பூர்வமான கடமையை செய்ய தவறும் போது, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில், சட்டவிரோத குவாரிகள் செயல்படுவதை தடுக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கலாம் என்று எம்.சி. மேத்தா வழக்கில், உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் நீண்ட நாட்களாக, சட்டவிரோதமாக மணல் குவாரிகள் செயல்பட்டதுடன், அதை தடுக்க மாநில அரசு தவறிவிட்டதையும் இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு அறிக்கைகள் மூலம் தெரிய வருகிறது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட மணல் அள்ள அனுமதித்ததால், சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டு உள்ளது.

நீதித்துறையின் அதிகார வரம்பு குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டது அல்ல. ஒரு சட்டத்தை எதிர்த்தோ, அல்லது அரசின் கொள்கை முடிவாக இருந்தாலும், அது அடிப்படை உரிமையை மீறும்பட்சத்தில், நீதிமன்றம் தலையிட முடியும். சுற்றுச்சூழலை பாதுகாக்க நாம் தவறினால், அது நம் மனித வாழ்க்கையை பாதிப்பதுடன், எதிர்கால சந்ததியையும் பாதிப்படையச் செய்யும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இதை கருத்தில் கொண்டு, அடிப்படை உரிமைகள், அரசியலமைப்பு உரிமைகளை பாதுகாக்கும் காவலர் என்ற முறையில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதும் நீதிமன்றத்தின் கடமையாகும். அதன் அடிப்படையில், மணல் குவாரிகளை மூடுவதற்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரியானது. அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த அப்பீல் மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர் .

 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sand quarries tamilnadu government petition dismissed

Next Story
ஆண்டாள் சர்ச்சை : வைரமுத்து மீதான விசாரணைக்கு தடைAandaal, Chennai High Court, Stay to Inquiry on Vairamuthu
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express