முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாளான தேவர் ஜெயந்தி நாளில், எடப்பாடி பழனிசாமி பசும்பொன் சென்று தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு, திரும்பும்போது அவருடைய வாகனம் மீது செருப்பு, கல்வீச்சு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அ.தி.மு.க பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி 3 ஆண்டுகளுக்கு பிறகு, முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையில் கலந்து கொள்ள இன்று பசும்பொன் சென்றார்.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவர் 116 வது ஜெயந்தி விழா, 61வது குரு பூஜை விழாவில் எடப்பாடி பழனிச்சாமி தேவர் விலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
எடப்பாடி பழனிசாமி, தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு, அந்த இடத்தில் இருந்து வெளியேறியபோது, அங்கே இருந்த ஒரு தரப்பினர், சசிகலாவிற்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி என்று கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அங்கே சிறிது தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு திரும்பும்போது, பசும்பொன்னில் உள்ள குளம் அருகே எடப்பாடி பழனிசாமி வாகனம் சென்றபோது, அ.தி.மு.க ஆட்சியில் 10.5% இடஒதுக்கீடு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 பேர் இ.பி.எஸ் சென்ற வாகனம் மீது செருப்பு மற்றும் கல்லை வீசியுள்ளனர். அவர்கள் வீசிய செருப்பு மற்றும் கல் இ.பி.எஸ் சென்ற காருக்கு முன் சென்ற கார் மீது விழுந்தது. இதனால், அங்கே பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக, இ.பி.எஸ் வாகனம் மீது செருப்பு மற்றும் கல் வீச்சில் ஈடுபட்ட இரண்டு பேரையும் பிடித்து விசாரித்தனர். அதில், ஒருவர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த முருகவேல் என்றும் மற்றொருவர் பொதி குளத்தைச் சேர்ந்த ராஜீவ் காந்தி என்பதும் தெரியவந்தது. போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அ.தி.மு.க பொதுச் செயலாளர் பசும்பொன் கிராமத்தில் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபோது, அ.தி.மு.க அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு, டாக்டர் மணிகண்டன், விஜயபாஸ்கர், வளர்மதி, அன்வர்ராஜா, கே.டி. ராஜேந்திர பாலாஜி, கோகுல ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“