தமிழ்நாடு, கர்நாடகா வனத்துறையினருக்கு சிம்ம சொப்பனமாக இருந்த சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளியாக இருந்த பெண் ஒருவர் 27 ஆண்டுகளுக்குப் பிறகு, பயங்கரவாதம் மற்றும் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் கர்நாடகா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக, கர்நாடகா வனத்துறை மற்றும் போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த சந்தன கடத்தல் வீரப்பனை காவல்துறை ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் தலைமையிலான போலீசார் 2004-ம் ஆண்டில் என்கவுண்ட்டர் செய்து சுட்டுக்கொன்றனர். அதற்குப் பிறகு, சந்தனக் கடத்தல் வீரப்பனின் அத்தியாயம் முடிந்தது.
இந்த நிலையில், சந்தன கடத்தல் வீரப்பனுடன் கூட்டாளியாக இருந்த ஸ்டெல்லா மேரி(40) 27 ஆண்டுகளுக்குப் பிறகு, கர்நாடகா மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள கொல்லேகால் காவல்நிலைய போலீசாரால், பயங்கரவாதம் மற்றும் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
113 வயதிலும் அசராமல் உழைத்து வியப்பில் ஆழ்த்தும் மிட்டாய் தாத்தா..
https://youtu.be/7Eyt2FAL4tw
சந்தன கடத்தல் வீரப்பனுடன் 1993-ம் ஆண்டில் இருந்து கூட்டாளியாக செயல்பட்ட ஸ்டெல்லா அக்கா என்று அழைக்கப்படும் ஸ்டெல்லா மேரி கர்நாடகா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர், இவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் ஸ்டெல்லாவின் கரும்பு தோட்டத்தில் காட்டு யானைகள் சேதப்படுத்தியது குறித்து விசாரணை நடத்தியபோது, கொல்லேகால் கிராமப்புற காவல் நிலைய போலீசாருக்கு நல்லூர் கிராமத்தில் வசிக்கும் ஸ்டெல்லாவைப் பற்றி தகவல் கிடைத்துள்ளது.
27 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட ஸ்டெல்லா மீதான வழக்குகள் குறித்து சாம்ராஜ்நகர் எஸ்.பி. ஆனந்த குமார் குமார் கூறுகையில், “அவர் பாலார் வெடிகுண்டு வெடிப்பு, ராமபுரா காவல் நிலையம் மீதான தாக்குதல் மற்றும் சட்டவிரோதமாக ஆயுதம் கடத்தல் தொடர்பான மூன்று வழக்குகளை தடா சட்டத்தின் கீழ் சந்தித்து வந்தார். அவர் பலமுறை சரணடைவதாக உத்தரவாதம் அளித்த போதும் சரணடையவில்லை. இதனிடையே, 2004-இல் போலீசாரின் நடவடிக்கையில் வீரப்பன் இறந்தார்.” என்று கூறினார்.
13 வயதில் வீரப்பன் கூட்டாளியாக சேர்ந்த ஸ்டெல்லா மேரி
ஸ்டெல்லா மேரி அவருடைய 13 வயதில் சுய விருப்பத்தின் பேரில் வீரப்பன் கூட்டத்தில் போய் சேர்ந்தார். இந்த காலங்களில் அவர் காட்டில் வாழ்ந்தார். ஸ்டெல்லா 18 மாதங்கள் வீரப்பன் கும்பலுடன் காட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஸ்டெல்லாவின் முதல் கணவர் வீரப்பனி உதவியாளராக இருந்த சுந்தா என்கிற வெல்லயன் ஆவார். இவர் ஸ்டெல்லாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஸ்டெல்லா திருமணத்துக்குப் பிறகு கணவருடன் காட்டிலேயே தங்கி இருந்தார்.
சுந்தா உடல்நலக்குறைவு காரணமாக இறந்ததைத் தொடர்ந்து, கொல்லேகால் வட்டம் ஜாகேரி சென்னிபுரதொட்டி கிராமத்தைச் சேர்ந்த வேலுசாமியை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். பின்னர், இவர்கள் இருவரும் வாழ்வாதாரத்துக்காக சென்னிபுரதொட்டிக்கு அருகே குத்தகை நிலத்தில் கரும்பு பயிரிட்டு வசித்துவந்ததாக போலீசார் கூறுகின்றனர். நான்கு நாட்களுக்கு முன்பு ஸ்டெல்லாவின் கரும்பு தோட்டத்தை காட்டு யானைகள் சேதப்படுத்தியபோதுதான் வனத்துறை அதிகாரிகளுக்கு ஸ்டெல்லா அங்கே இருப்பது பற்றி தெரியவந்ததாக போலிசார் கூறுகின்றனர்.
இதையடுத்துதான், கொல்லேகால் போலீஸார் வீரப்பன் கூட்டாளியாக இருந்த ஸ்டெல்லாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். வீரப்பன் இறந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய கூட்டாளியான ஸ்டெல்லாவை போலீசார் கைது செய்திருப்பது தமிழகம் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.