பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் சாதிய ரீதியான காரணங்களுக்காக கொலை செய்யப்படவில்லை என்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ராத்தோர் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர் வீட்டருகே மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை பெரும் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் காவல்துறையினர் கொலையாளிகளை பிடிக்க 5 தனி பிரிவு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை வேப்பேரி, காவல் ஆணையர் அலுவலகத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ராத்தோர் செய்தியாளர்களை சந்தித்தார். “ ஆம்ஸ்ட்ராங்கை அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் தாக்கினர். இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 8 நபர்கள் கைது செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆம்ஸ்ட்ராங் உடன் இருந்த 2 பேருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரசியல் காரணமாக அவர் கொலை செய்யப்படவில்லை ஆம்ஸ்ட்ராங் உடன் பல்வேறு நபர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. அதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்.
அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. சரியான விசாரணைக்கு பிறகுதான் அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது உறுதி செய்யப்படும். கைது செய்யப்பட்டவர்கள் மீது 5 முதல் 6 வழக்குகள் போடப்பட்டுள்ளது.
அருண் என்பவர் மீது மட்டும் எந்த வழக்குகளும் பதிவாகவில்லை. ஆம்ஸ்ட்ராங் மாநில தலைவராக இருக்கக்கூடிய நிலையில் அவர் எங்கு செல்கிறார் என்பது குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். ஆம்ஸ்ட்ராங் ஒரு கை துப்பாக்கியை அனுமதியோடு வைத்துள்ளார். கைது செய்யப்பட்ட நபர்கள்தான் கொலையை செய்ததாக தெரிவித்து வருகிறார்கள்.
இந்த வழக்கை பொறுத்தவரையில் சரியான நடவடிக்கை எடுப்பதற்கு நேரம் தேவைப்படும். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யபப்ட்ட 3 மணிநேரத்தில் குற்றவாளிகள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 8 நபர்களும் காவல்நிலையத்திற்கு வந்து ஆஜராகவில்லை. காவல்துறையினரால கைது செய்யப்பட்டவர்கள்தான்” என்று அவர் பேசினார்.