எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சென்னை சத்யம் திரையரங்கில் இலவசமாக நாப்கின் வழங்கும் இயந்திரம் பொருத்தப்பட்டிருப்பது, பெண்கள் மத்தியிலும், சமூக வலைத்தளங்களிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மாதவிடாய் காலங்களில் பெண்கள் இன்று பரவலாக பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களை கண்டுபிடித்த தமிழகத்தை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவரின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ‘பேட் மேன்’. அக்ஷய் குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படத்தை ஆர்.பால்கி இயக்கியுள்ளார். இத்திரைப்படம் நேற்று (திங்கள் கிழமை) வெளியானது.
இந்த திரைப்படம் மாதவிடாய் கால சுகாதாரம் குறித்து பரவலாகவும் வெளிப்படையாகவும் பேச வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இந்நிலையில், எஸ்பிஐ சினிமாஸ், தங்களுடைய சத்யம் திரையரங்கில், இலவசமாக நாப்கின் வழங்கும் இயந்திரத்தை பொருத்தியுள்ளது. விரைவில் தங்களுடைய அனைத்து திரையரங்குகளிலும் இத்தகைய வசதி ஏற்படுத்தப்படும் என அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்திற்காக, பிரபலங்கள் பலர் நாப்கினை கையில் வைத்துக்கொண்டு #PadmanChallenge என்ற சவாலை ஏற்று சமூக வலைத்தளங்களில் தங்கள் புகைப்படங்களை பகிர்ந்தனர். ஆனால், உண்மையில் இத்திரைப்படம் செயலளவில் மாற்றத்தைக் கொண்டுவருமா என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், எஸ்பிஐ சினிமாஸ், திரைப்படம் பார்க்கவரும் பெண்கள் திடீரென ஏற்படும் மாதவிடாயால் அசௌகரியத்தை உணராமல் இருக்க இத்தகைய வசதியை ஏற்படுத்தியுள்ளது.
சானிட்டரி நாப்கின்களைப் பொருத்தவரையில், கிராமங்களில் பெண்கள் பலர் அதனை இன்னும் பயன்படுத்த முடியாத நிலைமை நிலவிவருகிறது. தவிர, நாப்கின்கள் ஆரோக்கியமானதா என்ற விவாதமும்
இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.