/indian-express-tamil/media/media_files/2025/08/14/eps-seeman-ps-vijay-2025-08-14-15-12-27.jpg)
தூய்மைப் பணியாளர்களை காவல்துறை நள்ளிரவில் அப்புறப்படுத்தி கைது செய்ததற்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சி.பி.எம் மாநில செயலாளர் பெ. சண்முகம், சு. வெங்கடேசன் எம்.பி, சீமான், விஜய் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பணி நிரந்தரம் செய்யக் கோரி, ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்களை காவல்துறை நள்ளிரவில் அப்புறப்படுத்தி கைது செய்ததற்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சி.பி.எம் மாநில செயலாளர் பெ. சண்முகம், சு. வெங்கடேசன் எம்.பி, சீமான், விஜய் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “வணக்கம் ஸ்டாலின் அவர்களே...
ரிப்பன் மாளிகை வாசலில், நள்ளிரவில் அடக்குமுறையை ஏவி , கொரானவின் போது கூட நம் குப்பைகளை நீக்கி சுத்தம் செய்த தூய்மை பணியாளர்களை அடித்து நொறுக்கி , அங்கிருந்து அகற்றி பல்வேறு இடங்களில் சிறை வைத்துள்ளனர் உங்கள் ஏவல்துறை.
யார் அவர்கள்? சமூக விரோதிகளா? குண்டர்களா? நக்சலைட்டுகளா? இல்லையே. ஏழை எளிய மக்கள்! அன்றாடம் தூய்மைப் பணி செய்து, சென்னை மாநகரை சுத்தமாக வைத்திருந்தவர்கள்.
நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அதற்கு நேர்மாறாக செயல்பட்டத்தைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் அறவழியில் போராடியது ஒரு தவறா?
அவர்களோடு டீ, காபி அருந்தியது போல் போட்டோஷூட் எடுத்துக்கொண்டீர்களே... அப்போது மட்டும் இனித்தது? இப்போது நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் கேட்கும் போது கசக்கிறதா?
எதிர்க்கட்சித் தலைவராக நீங்கள் இருந்தபோது எழுதிய கடிதங்களில், எந்த வழக்கு இருந்தாலும், இவர்கள் பணி நிரந்தரம் செய்யுங்கள் என்று நாடகமாடினீரே, நினைவில் இருக்கிறதா?
"நள்ளிரவில் அடாவடித்தனமாக , வலுக்கட்டயாமாக நம் அரசுக்கும் மக்களுக்கும் பணி புரியும் , நலிவடைந்த தூய்மை பணியாளர்கள் மீது 79 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இது போன்ற ஒரு அடக்குமுறையை எந்த அரசும் ஏவியதில்லை.
தூய்மை பணியாளர்கள் 8 க்கும் மேற்பட்ட இடத்தில் சிறை வைக்கபட்டுள்ளார்கள் , அவர்கள் உடனடியாக விடுதலை செய்ய பட வேண்டும் எனவும் , இந்த அடாவடி நடவடிக்கைகளால் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் வலியுறுத்துகிறேன்.
தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரை, வலியை, வேதனையை தமிழ்நாடே பார்த்து கலங்குகிறது. அவர்கள் சிந்திய ஒவ்வொரு கண்ணீருக்கும் நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
சொல்ல வேண்டிய காலம் அவ்வளவு தூரமெல்லாம் இல்லை. இன்னும் 8 மாதங்கள் தான்.” என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூய்மைப் பணியாளர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், கைது செய்துள்ளவர்களை விடுதலை செய்யவும், தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி சி.பி.ஐ(எம்) சார்பில் வியாழக்கிழமை மாலை சென்னையில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பணி நிரந்தரம், தனியார்மய எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடிய தூய்மை பணியாளர்கள் மிகக் கடுமையாக தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு வெவ்வேறு மண்டபங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இரவோடு இரவாக காவல்துறை நடத்திய இந்த ‘அப்புறப்படுத்துதல்' முற்றிலும் சட்டத்திற்கும், நியாயத்திற்கும் புறம்பானது மட்டுமல்ல, மனித உரிமை மீறலுமாகும்.
ஒரு ஜனநாயக நாட்டில் தங்களுடைய கோரிக்கைகளுக்காக தொழிலாளர்கள் போராடுகிற போது காவல்துறை, நீதிமன்றம், நிர்வாகம் இவற்றின் அணுகுமுறையும் அரசின் அணுகுமுறையும் எளிய மக்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும்; சட்டத்திற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
ஆனால், இந்த பிரச்சனையில் மேற்கண்ட அனைத்து அரசு அமைப்புகளும் மூர்க்கத்தனமாகவே இதை கையாண்டுள்ளது. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்தவர்களை காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்துவதும், அதைக் கேள்வி கேட்க சென்றால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக சொல்லி நம்பர் பிளேட் இல்லாத காவல் வாகனத்தில் ஏற்றி சுற்றிக்கொண்டே அலைவதும் நாகரீக சமூகம் வெட்கித் தலை குனிய வேண்டிய நடவடிக்கைகள்.
தமிழ்நாடு அரசு உடனடியாக போராடும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். போராட்டத்திற்கு ஆதரவாக பேசியவர்களையும், ஆதரவு தெரிவிக்க வந்தவர்களையும் காவல்துறையினர் தாக்கி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. சம்பந்தப்பட்ட காவலர்கள் மீதும், தாக்குவதற்கு உத்தரவிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வர், உடனடியான மற்றும் நேரடி தலையீட்டின் மூலம் தூய்மை பணியாளர்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு காண வேண்டும், அத்துமீறி நடந்து கொண்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பாக இன்று மாலை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.” என்று தெரிவித்துள்ளார்.
தூய்மைப் பணியாளர்களுக்கான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சி.பி.ம் கட்சியைச் சேர்ந்த மதுரை தொகுதி எம்.பி சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இரவோடு இரவாக காவல்துறை நடத்திய ‘அப்புறப்படுத்துதல்' முற்றிலும் சட்டத்திற்கு புறம்பான
மனித உரிமை மீறல்.
அதைக் கேள்வி கேட்க சென்றால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக நம்பர் பிளேட் இல்லாத காவல் வாகனத்தில் ஏற்றி சுற்றிக்கொண்டே அலைந்தது நாகரீக சமூகம் வெட்கித் தலை குனிய வேண்டிய நடவடிக்கை.
அத்துமீறிய காவல் துறையினர் மீதும், அதற்கு உத்தரவிட்டவர்கள் மீதும் உடனடி நடவடிக்கை வேண்டும்.
உரிமைகளுக்காக நடக்கும் போராட்டங்களை எதிர்கொள்ள காவல்துறையை நம்புவதைப் போன்ற அரசியல் பலகீனம் வேறெதுவுமில்லை.” என்று கூறியுள்ளார்.
நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூய்மைப்பணியாளர்கள் மீதான திமுக அரசின் கோர ஒடுக்குமுறை அரசப்பயங்கரவாதத்தின் உச்சம்! பாசிசத்தின் வெறியாட்டம்! உங்கள் அதிகாரத்திமிரும், பதவி மமதையும், ஆணவவெறியும் அடங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை ஆட்சியாளர்களே.
தங்களது வாழ்வாதார உரிமைகோரி, தனியார்மயத்துக்கு எதிராக சென்னை, ரிப்பன் மாளிகை வாசலில் 13 நாட்களாக அறவழியில் போராடி வந்த தூய்மைப்பணியாளர்களை இரவோடு இரவாகக் குண்டுகட்டாகக் கைதுசெய்து, கொடும் தாக்குதல் தொடுத்து, திமுக அரசு ஏவியிருக்கும் அடக்குமுறையானது அரசப்பயங்கரவாதத்தின் உச்சம். விளிம்பு நிலை மக்களின் நியாயமானக் கோரிக்கைகளை ஏற்க மறுத்து, அவர்கள் மீது பாய்ச்சப்பட்டுள்ள ஒடுக்குமுறையானது கடும் கண்டனத்திற்குரியது. ‘சமூக நீதி’ எனும் சொல்லாடலைத் தாங்கள்தான் பிரசவித்தது போல, மூச்சுக்கு முன்னூறு தடவை உச்சரிக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்களே!
அடித்தட்டு உழைக்கும் மக்களின் மீது அதிகார வலிமைக் காட்டி, அடக்கி ஒடுக்குவதுதான் சமூக நீதியா? வாயிலும், வயிற்றிலடித்துக் கொண்டு கதறியழும் எளிய மக்களின் கண்ணீரும், ஓலமும் உங்கள் கல்மனதைக் கரைக்க வில்லையா? ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்றீர்களே, மொத்த தமிழ்நாடும் தூய்மைப்பணியாளர்கள் பக்கம் நிற்கிறது. நீங்கள் எந்த அணியில் நிற்கிறீர்கள்? ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்றீர்களே, எங்கள் உழைக்கும் மக்களோடு நிற்க மறுத்து, தனியார் முதலாளிக்கு எதற்கு வெண்சாமரம் வீசுகிறீர்கள்?
சென்னை எனும் மாநகரத்தைத் தங்களது உழைப்பினால் உருவாக்கியது; உருமாற்றியது ஆதித்தொல் குடிமக்கள். ‘சிங்காரச்சென்னை’ என இன்றைக்கு தம்பட்டம் அடித்துக் கொள்ளலாம். அதனை உருவாக்க இரத்தத்தை வியர்வையாய் நாளும் சிந்தி, அரும்பாடு பட்டு உழைத்தது ஆதித்தொல்குடி மக்கள்தான்; சேரிகளிலும், குப்பங்களிலும் வாழும் மண்ணின் மக்கள்தான். அந்த மக்கள் இன்றைக்குத் தூய்மைப்பணியாளர்களாக நிற்கிறார்கள். அவர்கள் போராடியது பொன்னையோ, பொருளையோ கேட்டல்ல; அடிப்படை வாழ்வாதார உரிமையைக் கேட்டு! அதனை செய்துகொடுப்பதில் என்ன சிக்கல்?
ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க அரசின் தனியார்மயத்துக்கு எதிராகப் போராடுவதாகக் கூறும் தி.மு.க அரசு, தமிழ்நாட்டில் தூய்மைப்பணியைத் தனியார்மயமாக்குவதற்காக இந்தளவுக்கு வரிந்துகட்டுவது ஏன்? இதுதான் உங்கள் திராவிட மாடல் ஆட்சியா? போராடும் தூய்மைப்பணியாளர்களை ஏறெடுத்தும் பாராத உங்களுக்குக் கம்யூனிசம், சோசலிசம் குறித்தெல்லாம் பேசுவதற்குக் கூச்சமாக இல்லையா? மானக்கேடு!
‘ரோம் நகரம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது’ போல, மக்கள் அங்கே அல்லாடிக் கொண்டிருக்கும் வேளையில், திரைப்படம் பார்த்துப் பொழுதுபோக்குவது ஒரு முதல்வருக்கு அழகா? இழிநிலை!
தூய்மைப்பணியாளர்களைக் கைதுசெய்து, 8 வெவ்வேறு இடங்களில் இரவோடு இரவாக அடைத்து வைத்து, அடித்துத் துன்புறுத்தியது எல்லாம் பாசிசத்தின் வெறியாட்டம் இல்லையா? கைதுசெய்யப்பட்டு 10 மணி நேரத்தைக் கடந்தும் காவலில் வைத்திருப்பது சட்டத்துக்குப் புறம்பானது இல்லையா? போராட்டக்களத்தில் இருந்த சமூகச் செயற்பாட்டாளர்களான தங்கைகள் வளர்மதி மற்றும் நிலவுமொழி செந்தாமரை ஆகியோரை மிக மோசமாக அடித்துச் சித்ரவதை செய்ததில், நிலவுமொழிக்கு கை உடைந்திருப்பதும், வளர்மதி மயக்க நிலையில் இருப்பதுமான செய்திகள் வருகிறதென்றால் இங்கு நடப்பது மக்களாட்சியா? ஈவிரக்கமற்ற காட்டாட்சியா? பேரவலம்!
தூய்மைப்பணியாளர்களோடு ஒன்றாக அமர்ந்து உணவருந்தி, வேடமிட்டு நாடகமாடிய முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், அடித்தட்டு உழைக்கும் மக்கள் மீது செலுத்தியிருக்கும் அரச வன்முறை வெட்கக்கேடு இல்லையா? தனியார்மயத்துக்கு ஆதரவாகவும், தனியார் முதலாளிக்கு ஆதரவாகவும் மண்ணின் மக்கள் மீது தொடுக்கப்பட்ட இத்தகைய கோரத்தாக்குதல்கள் திமுகவின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவுரை எழுதும் என்பது திண்ணம். திராவிட மாடலெனக் கூறி, அடக்குமுறை ஆட்சியைக் கட்டவிழ்த்துவிடும் ஆட்சியாளர்களே! உங்கள் அதிகாரத்திமிரும், பதவி மமதையும், ஆணவவெறியும் அடங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை!
கைதுசெய்யப்பட்ட தூய்மைப்பணியாளர்களை எவ்வித வழக்குகளுமின்றி, உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும், அவர்களது நியாயமான கோரிக்கைகளை ஏற்று, அவர்களது பணி நிலைப்பையும், வாழ்வாதாரத்தையும் உறுதிசெய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், வரும் ஆண்டில் நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தக்கப் பாடத்தைப் புகட்டுவார்களென எச்சரிக்கிறேன்.” என்று சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
த.வெ.க தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிசத் திமுக அரசுக்குக் கண்டனம்!
குண்டுக் கட்டாக இழுத்துச் சென்று கைது செய்த போது பெண் தூய்மைப் பணியாளர்கள் மயக்கம் அடைந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கைது நடவடிக்கையைப் பார்க்கும் போது மனசாட்சியுள்ள எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்குப் பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது தெரிகிறது. காயம் அடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவியையும் சிகிச்சையையும் உடனடியாக வழங்கி, அவர்களின் உடல்நலத்தைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வெவ்வேறு இடங்களில் தங்களின் குடும்பத்தினரோடு கூடத் தொடர்புகொள்ள முடியாத வகையிலும் எவ்வித உதவிகளும் கிடைக்காத வகையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குடும்பத்தினரோடு கூடத் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு அடைத்து வைக்க, தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா? ஆளும் அரசுக்கு மனசாட்சி சிறிதளவேனும் இருக்கிறதா? இந்தக் கொடூரமான நடவடிக்கையைப் பார்த்தால் தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியல்ல, கொடுங்கோலாட்சிதான் என்பது தெள்ளத் தெளிவாகிறது.
எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றச் சொல்லித் தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகிறார்கள்.
அதை ஏன் இன்னும் நீங்கள் நிறைவேற்றவில்லை?
அப்படிக் கொடுத்த வாக்குறுதியை உங்களால் நிறைவேற்ற முடியாது எனில், ஏன் வாக்குறுதிகளைக் கொடுக்கிறீர்கள்?
அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்னிறுத்திப் போராடுவதற்கு மாற்று இடம் வழங்கப்பட வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.