/indian-express-tamil/media/media_files/2025/08/14/valarmathi-arrest-2025-08-14-19-06-09.jpg)
சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணியை தனியார்மயமாக்குவதை எதிர்த்தும், தங்களை நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்கக் கோரியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
சென்னை மாநகராட்சியில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள், தங்களுக்கு நிரந்தரப் பணி மற்றும் காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். ஆனால், சென்னை மாநகராட்சி ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணியை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் செய்ததால், தங்களது வேலை பறிபோய்விடும் என்ற அச்சத்தில் இந்தப் போராட்டத்தைத் தொடங்கினர்.
இந்தப் போராட்டம் குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், "அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை" என்று கூறி, போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, காவல்துறையினர் நள்ளிரவில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். சுமார் 900-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, பல்வேறு திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்த வழக்கறிஞர்களான நிலவுமொழி மற்றும் வளர்மதி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இருவரும் காவல்நிலையத்தில் தாங்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளனர். சுடிதார் அணிந்த 20 பெண்கள் தங்களைத் தாக்கியதாகவும், இதில் தங்களது கைகள் உடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கைது நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தூய்மைப் பணியாளர்கள் மீதான தாக்குதல் ஜனநாயக விரோதமானது என்றும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு கவனிக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கைது செய்து அடைத்து வைக்கப்பட்டிருந்த தூய்மைப் பணியாளர்களை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அரசின் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனத்தையும் அவர் பதிவு செய்தார்.
தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு எதிராக அரசு மேற்கொண்ட அடக்குமுறையை சீமான் கடுமையாக விமர்சித்தார். "தூய்மைப் பணியாளர்களை இரவோடு இரவாக கைது செய்து, கொடுமையான தாக்குதலைத் தொடுத்து, தி.மு.க. அரசின் ஓவியிருக்கும் அடக்குமுறையானது அரச பயங்கரவாதத்தின் உச்சம்" என்று அவர் குற்றம் சாட்டினார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் நிலவு மொழிக்கு கை உடைந்திருப்பதும், வளர்மதி மயக்க நிலையில் இருப்பதும் உண்மைதானா என்று அவர் கேள்வி எழுப்பினார். இது மக்களாட்சியா அல்லது ஏவலாட்சியா என்றும் அவர் சீற்றத்துடன் வினவினார்.
தமிழக முதல்வரின் செயல்பாடுகள் குறித்தும் சீமான் விமர்சனம் செய்தார். "ரோம் நகரம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது" என்ற பழமொழியை மேற்கோள் காட்டி, மக்கள் அல்லல்படும்போது முதல்வர் திரைப்படம் பார்ப்பது முதல்வருக்கு அழகா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை மாநாகராட்சியின் தூய்மை பணியாளர்கள் தங்களை நிரந்தரப்படுத்தக்கோரி கடந்த 13 நாட்களாக அறவழியில் போராடி வந்தனர். அவர்களது கோரிக்கை ஞாயமானது என்பதை விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் போராட்டக்களத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்தார்.
இடது சாரி கட்சித்தலைவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினார். இச்சூழலில் நீதிமன்ற உத்தரவின் பேரில் போராடும் மக்களை நள்ளிரவில் கைது செய்துள்ளது காவல்துறை. போராட்டத்தை ஆதரித்த பல சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
குறிப்பாக வழக்கறிஞர் நிலவு மொழிமற்றும் சமூக செயற்பாட்டாளர் வளர்மதி போன்றோர் கைது செய்யப்பட்டு இரவு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். ஏன் கைது செய்கிறீர்கள்? என கேள்வி கேட்ட தோழர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். காவல்துறையின் இப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.
ஜனநாயக ரீதியாக போராடிய மக்களையும் ஆதரவாளர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவே ஜனநாயகத்துக்கு எதிரானதாகும். நீதிமன்றமும் காவல்துறையும் இணைந்து நடத்தும் மக்கள் விரோதப்போக்கு கவலைக்குரியதாக உள்ளது. தமிழ்நாடு அரசு உடனடியாக கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்வதோடு போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கோரிக்கை வைக்கின்றோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
#கண்டனம்
— வன்னி அரசு (@VanniKural) August 14, 2025
சென்னை மாநாகராட்சியின் தூய்மை பணியாளர்கள் தங்களை நிரந்தரப்படுத்தக்கோரி
கடந்த 13 நாட்களாக அறவழியில் போராடி வந்தனர்.
அவர்களது கோரிக்கை ஞாயமானது என்பதை விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்கள்
போராட்டக்களத்திற்கு சென்று
ஆதரவு தெரிவித்தார்.
இடது… pic.twitter.com/0WnVbroIPa
இந்தக் கைது நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தூய்மைப் பணியாளர்கள் மீதான தாக்குதல் ஜனநாயக விரோதமானது என்றும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு கவனிக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.