கோவை ப்ளூ ஸ்டோன் தங்க வைர நகை நிறுவனம் தூய்மை பணியாளர்களுக்கு சர்ப்ரைஸ் பரிசு வழங்கி கவுரவிப்பு
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கோவைப்புதூர் பகுதியை சேர்ந்தவர் சிவகாமி. இவர் தனது 6 பவுன் தங்க நகையை தவறுதலாக மருந்து பையில் போட்டு வைத்திருந்த நிலையில் அவரது மருமகள் வீட்டை தூய்மை செய்யும் பணியின் போது தங்க நகை இருந்த கவரை தவறுதலாக குப்பையில் போட்டு தூய்மை பணியாளர்களிடம் கொடுத்தார்.
இந்நிலையில் சுமார் ஒரு டன் அதிகமாக இருந்த குப்பையில் இருந்த நகைகளை தூய்மை பணியாளர்கள் சிலர் மீட்டு நகை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். தமிழகம் முழுவதும் கவனம் ஈர்த்த இந்த சம்பவத்தை தொடர்ந்து தூய்மை பணியாளர்களின் பணி அர்ப்பணம் குறித்து பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ப்ளூ ஸ்டோன் தங்கம் மற்றும் வைர நகை விற்பனை நிறுவனம் சுமார் மூன்றரை லட்சம் மதிப்பிலான தங்க நகையை மீட்டு உரிமையாளரிடம் கொடுத்த தூய்மை பணி மேற்பார்வையாளர் மணிகண்டன் மற்றும் தூய்மை பணியாளர்கள் ராணி, சத்யா, சாவித்திரி ஆகியோரை தங்களது நிறுவனத்திற்கு வரவழைத்து பாராட்டினர்.
தொடர்ந்து அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்த நிறுவனத்தின் மேலாளர் பால்ராஜ் - இது போன்ற நேர்மையான பணியாளர்களின் செயல்களை ஊக்குவிக்க இந்த பரிசுகளை வழங்கியதாக தெரிவித்தார்.
இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில், மக்கும் குப்பை- மக்காத குப்பை என பொதுமக்கள் பிரித்து கொடுத்தால்,பொது மக்கள் தவறுதலாக இழந்த பொருட்களை எளிதாக மீட்க முடியும் எனவும் தெரிவித்தனர். மக்கும் குப்பை மக்காத குப்பைகளை பிரித்து கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், கோவை வாழ் மக்களிடையே குப்பையில் இருந்து தங்க நகை மீட்கப்பட்ட இந்த சம்பவம் கவனத்தை ஈர்த்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“