Advertisment

சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் மரணம்; தலைவர்கள் இரங்கல்

இந்தியாவின் மிகப்பெரிய கண் மருத்துவமனைகளில் ஒன்றான சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் காலமானார். அவருக்கு வயது 83.

author-image
WebDesk
New Update
Sankara Nethralaya Dr SS Badrinath

சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் (Image Credit: @vazhapadi/x)

இந்தியாவின் மிகப்பெரிய கண் மருத்துவமனைகளில் ஒன்றான சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 22) காலமானார். அவருக்கு வயது 83.  சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் மூலம் லட்சக் கணக்கான ஏழை எளிய மக்களுக்கு இலவச கண் சிகிச்சை அளித்த டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு மருத்துவமனைகளில் ஒன்றான சங்கர நேத்ராலயாவை மருத்துவமனையை சென்னையில் நிறுவியவர் டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத். இவர் தனது படிப்பு மற்றும் ஆராய்ச்சியை வெளிநாடுகளில் முடித்துவிட்டு, 1978ம் ஆண்டு இந்த அமைப்பை சென்னையில் நிறுவினார்.

செங்கமேடு சீனிவாச பத்ரிநாத் என்கிற டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாட் சென்னை புறநகரில் பிறந்தவர். அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் மருத்துவத் தொழிலைத் தொடங்கிய டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் அங்கே பல கண் மருத்துவ மையங்களில் பயிற்சி பெற்றார். அதைத் தொடர்ந்து 1978-ம் ஆண்டு, டாக்டர் பத்ரிநாத் ஒரு மருத்துவக் குழுவோடு சென்னையில் ‘சங்கர நேத்ராலயா’ எனும் தொண்டு  நிறுவனத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு லாப நோக்கமற்ற, தரமான இலவச கண் சிகிச்சை மருத்துவத்தைக் கொடுக்க முன்வந்தார்.

அவர் தொடங்கிய சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் மூலம் இதுவரை லட்சக் கணக்கான ஏழை, எளிய மக்கள் இலவச கண் சிகிச்சை பெற்று பயன் அடைந்துள்ளனர். சங்கர நேத்ராலயா மருத்துவமனை மூலம் தினமும் குறைந்த பட்சம் தினமும் 100 பேருக்கு இலவச கண் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த நிறுவனத்தின் மூலம் வளரும் கண் சிகிச்சை நிபுணர்களுக்கான பயிற்சித் திட்டங்களும் அளிக்கப்படுகிறது. இவரது மருத்துவ சேவையை பாராட்டி இந்திய அரசு டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத்க்கு பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி கௌரவித்தது.

சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் மூலம் ஏராளமான மக்களுக்கு இலவச கண் சிகிச்சை அளித்த டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 22) காலமானார். இவரது மறைவுக்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு மருத்துவமனைகளில் ஒன்றான சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் நிறுவனர்,  டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். 

கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக, பொருளாதார ரீதியாக நலிவடைந்த ஏழை எளிய மக்களுக்கும் தரமான கண் மருத்துவ சிகிச்சை, இலவசமாக வழங்கப்படுவதை உறுதி செய்தவர். கண் மருத்துவக் கல்விப் பணிகளிலும் சிறந்து விளங்கியவர். உயரிய பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்றவர்.

டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர்கள் மறைவு, நம் சமூகத்துக்கும், மருத்துவ உலகுக்கும் பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தமிழ்நாடு பா.ஜ.க சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  ஓம் சாந்தி!” என்று தெரிவித்துள்ளார்.

சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் மறைவுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: “பிரபல கண் மருத்துவரும், சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் நிறுவனருமான டாக்டர் எஸ். எஸ். பத்ரிநாத் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். 

டாக்டர் பத்ரிநாத் அவர்களால் தொடங்கப்பட்ட சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை குறைந்த செலவில் சிகிச்சை அளிப்பதோடு மட்டுமல்லாமல், ஏழையெளிய மக்களுக்கு இலவசமாக கண்புரை உள்ளிட்ட பல்வேறு அறுவை சிகிச்சைகளையும் மேற்கொண்டு 
வருகிறது. ஆயிரக்கணக்கான இளம் கண் மருத்துவர்களை உருவாக்கிய பெருமையும் டாக்டர் பத்திநார் அவர்களுக்க உண்டு. இவரது சேவையை பாராட்டி பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. தன்னலம் துறந்து பிறர் நலத்துக்காக உழைத்த பெருமைக்குரியவர் டாக்டர் பத்ரிநாத் அவர்கள். இவருடைய இழப்பு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பாகும். இவர் விட்டுச் சென்ற இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது. 

டாக்டர் பத்ரிநாத் அவர்களை இழந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தினருக்கும், மருத்துவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment