சென்னை ஐஐடியில் தமிழ் தாய் வாழ்த்துக்கு பதிலாக சமஸ்கிருதப்பாடல் : தலைவர்கள் கண்டனம்

ஐஐடி விழாவில் நேற்று, இரண்டு மாணவர்கள், இரண்டு மாணவிகள் சமஸ்கிருதத்தில் அமைந்த கணபதி வாழ்த்துப் பாடலை பாடினர். இது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

சென்னை ஐஐடியில் தமிழ்தாய் வாழ்த்துப் பாடலுக்கு பதிலாக சமஸ்கிருத பாடல் பாடப்பட்ட விவகாரம் சர்சையை உருவாக்கியுள்ளது.

சென்னை ஐஐடியில் தேசிய துறைமுக நீர்வழிப் பாதை கடற்கரை துறையினை உருவாக்குவது தொடர்பாக ஐஐடி கடல்சார் தொழில் நுட்பத் துறைக்கும், மத்திய கப்பல் போக்குவரத்துத் துறைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, பொன்.ராதாகிருஷ்ணன், சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் வழக்கமாக தமிழ்தாய் வாழ்த்துப் பாடப்படும். ஆனால் ஐஐடி விழாவில் நேற்று, இரண்டு மாணவர்கள், இரண்டு மாணவிகள் சமஸ்கிருதத்தில் அமைந்த கணபதி வாழ்த்துப் பாடலை பாடினர். இது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் திட்டமிட்டு தமிழை அவமானப்படுத்தியதாக பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தமிழ் தாய் பாடலை பாடாமல் சமஸ்கிருதத்தில் பாடல் பாடியதற்கு மத்திமுக பொதுச் செயலாளர் வைகோ, மே பதினேழு இயக்கம் சார்பில் திருமுருகன் காந்தி, பழ.நெடுமாறன் ஆகியோர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த சர்ச்சை தொடர்பாக ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தியிடம் கேட்ட போது, ‘எந்த பாடலை பாட வேண்டும் என்பது மாணவர்களின் தேர்வு. மாணவர்களை நிர்வாகம் எப்போதும் இந்தப் பாடலை பாட வேண்டும். இந்த பாடலை பாடக் கூடாது என கட்டாயப்படுத்துவது இல்லை. இதில் சர்ச்சைகளை உண்டாக்க வேண்டாம்’ என கேட்டுக் கொண்டார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close