ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று உச்ச நீதிமன்றத்தால் விடுதலையான சாந்தன் கல்லீரல் பாதிப்பு காரணமாக சிகிக்சை பெற்று வந்த நிலையில் இன்று (பிப்.28) உயிரிழந்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவரது தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இந்த வழக்கில் நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 2022-ம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வந்த 7 பேரும் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். ஆயுள் தண்டனை பெற்று வந்த சாந்தனும் விடுதலை செய்யப்பட்டார்.
சாந்தன் இலங்கை தமிழர் என்பதால், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரி சாந்தன் பலமுறை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வந்தார்.
இந்நிலையில், சாந்தனுக்கு கடந்த ஜனவரி மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக கடந்த 27-ம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
கல்லீரல் செயலிழப்புக்கு (சிரோஸிஸ்) உள்ளான சாந்தனுக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தனின் உடல் நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. சாந்தனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று (பிப்.28) காலை 7.50 மணிக்கு சிகிச்சை பலனின்றி சாந்தன் உயிரிழந்ததாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக, கடந்த 24-ம் தேதி சாந்தன் இலங்கை செல்ல அனுமதி அளித்திருந்தது.
சாந்தனின் வழக்கறிஞர் புகழேந்தி கூறுகையில், சாந்தனின் உடல் பிரேதப் பரிசோதனை முடிந்தது. எம்பார்மிங் செய்யப்பட்டு இலங்கையில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“