நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியாக அறியப்பட்ட சந்தோஷ் பாபு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற பிறகு அவர் இன்று மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். மநீம தலைவர் கமல்ஹாசனுடன் கைகோர்த்துள்ள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு தமிழக அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளார்.
தமிழகத்திலும் தலைநகர் சென்னையிலும் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என்று அறியப்பட்டவர் சந்தோஷ் பாபு. இவர் பணி ஓய்வு பெறுவதற்கு இன்னும் 8 ஆண்டுகள் இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் திடீரென விருப்ப ஓய்வு பெற்றார். அவர் விருப்ப ஓய்வு பெற்றது. அரசியல் தலைவர்கள் உள்பட பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஐஏஎஸ் பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற சந்தோஷ் பாபு, சென்னையில் உள்ள ஆஃபிசர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் முழுநேர ஆசிரியாக சேர்ந்தார். இந்த அகாடமியில் சந்தோஷ் பாபு, மின் ஆளுகை, தொழில்நுட்பம், பொது அறிவு, பொது நிர்வாகம் போன்ற பாடங்களை மாணவர்களுக்கு கற்பிப்பார் என்றும் ஆஃபிசர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் தலைமை வழிகாட்டியாக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில்தான், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, இன்று (டிசம்பர் 1) மநீம தலைவர் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு மநீம தலைமை அலுவலக பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி திரு. @SanthoshBabuIAS அவர்கள் இன்று தலைவர் @ikamalhaasan அவர்களின் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தலைமை அலுவலக பொதுச் செயலாளராக இணைந்துள்ளார்.#நம்மவரை_நோக்கி_நல்லவர்கள் pic.twitter.com/cfQPdrutXx
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 1, 2020
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து கமல்ஹாசனுடன் கைகோர்த்துள்ள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு அரசியல் களத்தில் கவனத்தைப் பெற்றுள்ளார். யார் இந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு?
தமிழகத்திலும் தலைநகரிலும் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியாக அறியப்பட்டவர் சந்தோஷ் பாபு. 25 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சிப் பணி அனுபவமுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்காக தமிழக அரசின் சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். அவர் வகித்த ஒவ்வொரு பதவியிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி, மக்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளார். அவர் தனது வாழ்க்கையில் 250 க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளையும் புதுமுயற்சிகளையும் தொடங்கியுள்ளார். ஐ.டி துறையின் முதன்மை செயலாளராகவும், சிவகங்கை, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் ஆட்சியராகவும் அவர் ஆற்றிய பங்களிப்புகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. அதுமட்டுமில்லாமல், சந்தோஷ் பாபு லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ், ஹார்வர்ட் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் ஆகியவற்றிலிருந்து பட்டங்களைப் பெற்றுள்ளார்.
சந்தோஷ் பாபுவுக்கு ‘தமிழகத்தின் பெருமை’ என்ற விருதும் வழங்கப்பட்ட்டுள்ளது. 2017ம் ஆண்டில், பூம்புகார் அவருடைய தலைமையில் தேசிய மின்-ஆளுகை விருதையும், ஸ்கோச் ஸ்மார்ட் கவர்னன்ஸ் பிளாட்டினம் விருதையும் வென்றார். ரோட்டரி கிளப், மெட்ராஸ் மெட்ரோவும் அவருக்கு ‘சேஞ்ச் மேக்கர்’ (மாற்றத்தை உருவாக்குபவர்) என்ற விருதை வழங்கியுள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தனது ‘அர்ப்பணிப்புமிக்க தலைமை’ குறித்த உரையில் சந்தோஷ் பாபுவின் சிறந்த சாதனையைப் பற்றி குறிப்பிடுட்டுள்ளார்.
இப்படி, ஐஏஎஸ் அதிகாரியாக சிறப்பாக பணியாற்றி வந்த சந்தோஷ் பாபு, நிர்வாக இயக்குநராக இருந்த தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷனுக்கான டெண்டருக்கு ஒப்புதல் அளிக்குமாறு அரசியல் தலைவர்கள் அழுத்தம் கொடுத்ததால் அதிருப்தி அடைந்தார். அதனால், அவர் ஐ.ஏ.எஸ் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இன்னும் 8 ஆண்டுகள் இருந்த நிலையில் விருப்ப ஓய்வு பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் உள்ள ஐஏஎஸ் ஆஃபிசர்ஸ் அகாடமியில் தலைமை வழியாகாட்டியாகவும் பயிற்சியாளராகவும் இணைந்தார்.
அவர் ஐஏஎஸ் அகாடமியில் இணைந்து 2 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில், யாரும் எதிர்பார்க்காத நிலையில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமயில் அக்கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு அக்கட்சியில் மநீம தலைமை அலுவலக பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தபின், கமல்ஹாசனுடன் சேர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சந்தோஷ் பாபு, தமிழக அரசின் அழுத்தம் காரணமாகத் தான் பதவி விலகியதாக சந்தோஷ் பாபு தெரிவித்தார். தமிழகம் மற்ற மாநிலங்களை விட எங்கேயோ முன்னேறியுள்ளது. ஆனால், அதைவைத்து திருப்தி அடைய முடியாது. தமிழகம் அடைந்த வளர்ச்சியைவிட இன்னும் முன்னேற வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். ஒவ்வொரு விஷயத்திலும் மாற்றம் வேண்டும். அரசாங்கத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும். அதற்கு நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்துதான் உருவாக்கமுடியும். இந்தியா டுடே மூன்றாண்டுகளாகத் தமிழகத்தைத் தேர்வு செய்துள்ளதாகச் சொல்கிறது. ஆனால், நாங்கள் சொல்வதைச் செய்தால் தமிழகம் எங்கேயோ இருக்கும் எனத் தெரிவித்தார். தமிழக அரசில் லஞ்சம், ஊழல் உள்ளதா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்க மறுத்த சந்தோஷ் பாபு அது உங்களுக்கே தெரியும் என்று கூறினார்.
நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என்று அறியப்பட்ட சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யத்தில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு ஒரு புதிய தெம்பை அளித்திருப்பதாக மநீம கட்சியினர் கூறுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil ”