சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில், அமலாக்கத் துறை நளினி சிதம்பரத்திற்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்ட சாரதா சிட் பண்ட் நிறுவனம் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர் களிடமிருந்து பணம் வசூலித்து சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை திருப்பி கொடுக்க முடியாமல் ஏமாற்றியதாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் அந்த நிதி நிறுவனத்தின் நிறுவனர் சுதீப்தா சென் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 25 முறை ஆஜராகி வாதடிய நளினி சிதம்பரத்திற்கு சாரதா சிட் பண்டு நிறுவன கணக்கில் இருந்து பெருந்தொகை வழக்கறிஞர் ஊதியமாக மாற்றப்பட்டு இருப்பதாக தகவல் அமலாக்க துறைக்கு கிடைத்தது. இந்நிலையில், இந்தப் பணம் எவ்வாறு வழங்கப்பட்டது உள்ளிட்ட விபரங்கள் தொடர்பான விசாரணைக்காக, (கடந்த ஆண்டு 2017) செப்டம்பர் 23 ஆஜராகும்படி, நளினிக்கு அமலாக்கத் துறை கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி (செப்டம்பர் 7 தேதி) சம்மன் அனுப்பியது.
இந்த சம்மனை எதிர்த்து நளினி சிதம்பரம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சாரதா சீட் பண்ட் வழக்கில் தான் குற்றம் சாட்டவராகவோ, சாட்சியாகவோ சேர்க்கப்படவில்லை. சட்டப்படி பெண்களை விசாரணைக்கு அழைக்கக் கூடாது. அவர்களின் வீட்டிற்கு சென்று தான் விசாரிக்க வேண்டும். எனவே இந்த சம்மன் ரத்து செய்ய வேண்டும். மேலும் இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சிவஞானம், நளினி சிதம்பரம் ஆஜராக அமலாக்க துறை அனுப்பி இருந்த சம்மனை நிறுத்தி வைப்பதாகவும், சம்மன் மீது மேல் நடவடிக்கைகள் எடுக்க இடைக்கால தடைவிதித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார்.
இந்நிலையில் சம்மனை நிறுத்தி வைத்த உத்தரவை நீக்க வேண்டும் எனவும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற சம்மனை உறுதி செய்ய வேண்டும் என கோரி அமலாக்க துறை சார்பில் மனு தாக்கல் செய்யபட்டது.
இந்த வழக்கு கடந்த வாரம் இறுதி விசாரணைக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு வந்தது. அப்போது நளினி சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், நளினி சிதம்பரத்திற்கு கொடுக்கப்பட்ட வழக்குரைஞர் கட்டணம் குற்றத்தின் மூலம் கிடைத்த பணம் என்பதை அடையாளம் காட்டப்படவில்லை. இந்த வழக்கில் சிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் அமலாக்க துறை செயல்படுகின்றது. அரசியல் காழ் புணர்ச்சி காரணமாக அமலாக்க துறை செயல்படுகின்றது.
சாரதா சிட்பண்ட் வழக்கில் பல வழக்கறிஞர்கள் ஆஜரான அமலாக்கத்துறை எனக்கும் மட்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் தொடர்பாக மனோரஞ்ஜனா கைது செய்யப்படுவதற்கு முன்பாக ஒரு மாதிரியாகவும், கைது செய்யப்பட்ட பிறகு ஒரு மாதிரியாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். எனது புகழை களப்படுத்துவதற்காகக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டத்தில் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் நேரில் அலுவலத்தில் விசாரணைக்கு ஆஜராகவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார். எனவே சம்மனை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.
அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்ட ஜென்ரல், இந்த வழக்கில் ஆதாரங்களை திரட்டவே நளினிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சாரதா நிதி நிறுவன வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை செய்ததில் முதலீட்டாளர்களிடம் இருந்து பெற பட்ட பணம் தான் நளினி சிதம்பரத்திற்கு அளிக்கபட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் செல்லுபடியாகாது. இவருக்கு அளிக்கப்பட்ட தொகைக்கான அவரின் சொத்துகளை முடக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. இதற்காக யாரிடமும் அனுமதி கேட்ட தேவையில்லை என்றார்.
இரு தரப்பு வாதங்கள் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம், அமலாக்க துறை சம்மனை எதிர்த்து நளினி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாகவும், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என புதிதாக நளினி சிதம்பரத்திற்கு அமலாக்க துறை சம்மன் அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.