Sarath Kumar | கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் நடிகர் சரத் குமார் கலந்துகொண்டார். முன்னதாக, பிரதமர் மோடி திருவனந்தபுரம் வரை விமானத்தில் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வந்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சரத்குமார், “சமத்துவ மக்கள் கட்சியை பாரதிய ஜனதா உடன் இணைத்த பின்னர் இது எனது கன்னி பேச்சு.
பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிலும் நம் தேசத்திலும் நல்ல கருத்தை பதிவு செய்துவருகிறார். அவரின் கருத்தை நான் 40 தொகுதிகளிலும் முன்நிறுத்துவேன்.
நான் ஒருபோதும் எடுத்த காரியத்தை முடிக்காமல் இருந்ததில்லை. அந்த வகையில் நான் இந்தக் காரியத்தை எடுத்துள்ளேன்.
எந்த ஒரு சுயநலமும் இல்லாமல் நாட்டுக்காக பிரதமர் மோடி நல்லாட்சி செய்துவருகிறார். நான் அந்தக் கட்சியுடன் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்துள்ளேன். நாட்டில் ஊழலற்ற நல்லாட்சி தேவை.
தமிழ்நாட்டில் நடைபெறும் ஊழலாட்சிகள் அகற்றப்பட வேண்டும். கடந்த 57 ஆண்டுகள் திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்துவிட்டார்கள்.
இந்தத் திராவிடம் குடும்ப ஆட்சியும், மன்னராட்சியும்தான் நடத்துகிறது. தி.மு.க.வில் தொண்டன் தலைமைக்கு வரமுடியாது.
2025ல் அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா வரும்போது அதனை வழிநடத்த மோடி வர வேண்டும். உழைப்பால் உயர்ந்தவர் மோடி.
அண்ணாமலையை பொறுத்தமட்டில், தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டுவருகிறார். சுதந்திர இந்தியாவில் இது முக்கியமான காலகட்டம்.
மோடி 3வது முறையாக பிரதமர் ஆக வர வேண்டும். அதற்காக தாமரை ஒவ்வொரு தொகுதிகளிலும் மலர வேண்டும்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா வெல்ல வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, “பாரத் மாதா கி ஜெய். தமிழ் அன்னையை வணங்குகிறேன்” என தனது உரையை நிறைவு செய்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“