சரத் பிரபு உடலுக்கு டெல்லியில் ஓபிஎஸ் அஞ்சலி : ‘இனி இது போன்ற மரணம் நடைபெறாது’

சரத் பிரபு உடலுக்கு டெல்லியில் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார். ‘இனி இதுபோன்ற மரணம் நடைபெறாமல் நடவடிக்கை எடுப்போம்’ என்றார் அவர்.

சரத் பிரபு உடலுக்கு டெல்லியில் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார். ‘இனி இதுபோன்ற மரணம் நடைபெறாமல் நடவடிக்கை எடுப்போம்’ என்றார் அவர்.

சரத் பிரபு, திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையத்தை சேர்ந்தவர். டெல்லியில் உள்ள யூசிஎம்எஸ் மருத்துவமனையில் எம்.எஸ். மருத்துவ மேற்படிப்பு படித்து வந்தார் இவர். நேற்று அதிகாலையில் அங்குள்ள மருத்துவமனையில் உள்ள கழிவறையில் அவர் பிணமாக கிடந்தார்.

சரத் பிரபு மரணம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர், மாணவர் சரத் பிரபு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், ‘ஊசி மூலம் பொட்டாசியம் குளோரைடை செலுத்தி சரத்பிரபு தற்கொலை செய்து இருக்கலாம். சரத்பிரபு சடலமாக மீட்கப்பட்ட கழிவறையில் ஊசிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கழிவறைக்கு வெளியே பொட்டாசியம் குளோரைடு கண்டெடுக்கப்பட்டது’ எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சரத் பிரபுவின் உடல் டெல்லியில் இன்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் அவரது மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே பட்ஜெட் தொடர்பாக மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்ற தமிழக நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அங்கு மாணவர் சரத் பிரபுவின் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

பிறகு நிருபர்களிடம் பேசிய ஓபிஎஸ், ‘டெல்லியில் மருத்துவ மாணவர் சரத்பிரபு மரணம் வருத்தம் அளிக்கிறது. சரத்பிரபு மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவர்கள் தற்கொலை தவிர்க்கப்பட வேண்டியது. தமிழக மாணவர்கள் மரணம் இனி நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.’ என குறிப்பிட்டார்.

 

×Close
×Close