கடத்தல் - கொலை வழக்கில் சரவணபவன் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை
தற்போது பெயிலில் இருக்கும் ராஜகோபால், ஜூலை 7-ம் தேதிக்குள் சரணடைய வேண்டும்
Saravana Bhavan owner P Rajagopal gets life imprisonment : சென்னை மற்றும் தமிழகமெங்கும் சரவணபவன் உணவங்களை நடத்தி வருபவர் ராஜகோபால். சரவணபவன் உணவகத்தின் உரிமையாளாரான இவர், உணவக மேலாளரை கொடைக்கானலுக்கு கடத்திச் சென்று கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.
கொலை செய்யப்பட்ட பிரின்ஸ் சாந்தகுமார் யார் ?
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்தவர் ஜீவஜோதி. இவருடைய தந்தை அவ்வுணகத்தின் மேலளராக பணியாற்றுகிறார். மேலும் இவருடைய கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் டியூசன் ஒன்றை நடத்தி வந்தார். பின்பு சரவணபவனிலேயே வேலைக்கு சேர்ந்தார்.
90களின் பிற்பாதியில் இருந்தே ஜீவஜோதியை மணம் முடித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ராஜகோபாலுக்கு இருந்தது. அவருடைய ஆசையை நிராகரித்த அப்பெண் சாந்தகுமாரை மணந்து கொண்டார். ஆனாலும் தொடர் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர் அத்தம்பதியினர். 2001ம் ஆண்டு அத்தம்பதியினர் தங்களின் உயிருக்கு ராஜகோபாலால் அச்சுறுத்தல் இருக்கின்றது என்று கூறி புகார் அளித்தனர்.
ஆனால் அதே மாதம் சாந்தகுமார் சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு கடத்தப்பட்டு அங்கே கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார். அவருடைய சடலம் வனத்துறையினரால் கண்டெடுக்கப்பட்டது.
இதுவரை இவ்வழக்கில் நடந்தது என்ன ?
இந்த விவகாரம் பெரிதாக வெடிக்க, 2001 நவம்பர் 23ம் தேதி சரணடைந்தார் ராஜகோபால். 2003 ஜூலை 15ல் பெயிலில் வெளியே வந்தார். ஜீவஜோதிக்கு பணம் கொடுத்து இந்த விவகாரத்தை மறைக்க அவர் முயற்சிகள் மேற்கொண்டார் என அவர் மீது மீண்டும் புகார்கள் எழுந்தன.
இந்த வழக்கை விசாரித்த சென்னை பூந்தமல்லி நீதிமன்றம், ராஜகோபாலுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், 55 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. கொலைக்கு உதவி புரிந்த காசி விஸ்வநாதன், டேனியல், கார்மேகம், தமிழ்செல்வன், ஹூசைன், , முருகானந்தம், சேது, பட்டுரங்கம் ஆகியோருக்கு 9 ஆண்டுகள் வரை தண்டனை விதித்தது நீதிமன்றம்.
அதே போல் கடத்தல் வழக்கில் ராஜகோபாலுக்கு 3 ஆண்டும், மற்ற 8 பேருக்கு இரண்டு ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜகோபால் மனுதாக்கல் செய்தார். ஆனால் அரசு தரப்பில் 10 ஆண்டு தண்டனையை ஆயுள் தண்டனையாக உயர்த்த வேண்டும் என்று மனுதாக்கல் செய்தது.
2009ம் ஆண்டில் பி.கே. மிஸ்ரா, பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு ராஜகோபாலுக்கு ஆயுட்தண்டனை விதித்து உத்தரவிட இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.
தற்போது பெயிலில் இருக்கும் ராஜகோபால், ஜூலை 7-ம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.
Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook