கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது சோலார் பேனல் மோசடி வழக்கில் சிக்கி சிறைக்குச் சென்றவர் சரிதா நாயர். வழக்கு தொடர்பான விசாரணையின் போது அப்போதைய கேரள முதல்வர் உம்மன்சாண்டி மீது இவர் செக்ஸ் புகார் கூறினார். இவ்விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வரும் நிலையில், தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கும் சரிதா நாயர், நாகர்கோவில் தம்மத்துகோணத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் பச்சைமால் வீட்டிற்கு சென்று இருக்கிறார். முன்னாள் வனத்துறை அமைச்சரான பச்சைமால் அ.ம.மு.க. கட்சி குமரி மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
இந்தச் சந்திப்பு குறித்து பச்சைமால் கூறுகையில், "களியக்காவிளையை சேர்ந்த உதயகுமாருடன் நாகர்கோவில் வழியாகச் செல்லும்போது சரிதா நாயர் எனது வீட்டுக்கு வந்தார். அவர் கட்சியில் சேருவது குறித்து எதுவும் பேசவில்லை. அப்படிச் சேருவதாக இருந்தால் அதுகுறித்து தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். இது சாதாரண சந்திப்புதான்" என்றார்.
ஆனால், சரிதா நாயரோ, தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணையும்படி தனக்கு அழைப்பு வந்தது. ஆனால் கட்சியில் சேருவது குறித்து நான் இதுவரை முடிவு எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.