SARKAR ... விஜய் நடிப்பில் தயாராகும் 62-வது படத்தின் பெயர் இது! நாளை பிறந்த நாள் கொண்டாடும் வேளையில் இன்று படத்தின் பெயர் வெளியாகியிருக்கிறது.
சர்கார் என படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டு சில நிமிடங்களிலேயே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சரமாரியாக ஷேர் செய்ய ஆரம்பித்தார்கள். 40 நிமிடங்களில் SARKAR ட்விட்டரில் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது.
SARKAR: தளபதி 62 பெயர் அறிவிப்பு- வைரல் ஆகும் ஃபர்ஸ்ட் லுக்
நாளை (ஜூன் 22) விஜய் தனது பிறந்த நாளை கொண்டாடும் வேளையில் இன்றே அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக படத்தின் பெயரையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
SARKAR: தளபதி 62 பெயர் அறிவிப்பு- ஃபர்ஸ்ட் லுக்
முன்னதாக இன்று காலையில் இருந்து கவுண்ட் டவுன் மாதிரி, தளபதி 62 படத்தின் பெயர் அறிவிப்பு தொடர்பாக சன் பிக்சர்ஸ் அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தது. மாலை 6 மணிக்கு விஜய் சிகரெட் பற்ற வைக்கும் காட்சியான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
முகத்தில் தாடியுடன் ஆக்ஷன் ஹீரோவுக்கான அம்சத்துடன் ஃபர்ஸ்ட் லுக் காட்சியில் தோன்றுகிறார் விஜய். எனவே படம் ஆக்ஷன் கலந்த விறுவிறுப்புடன் திகழும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சியை போஸ்டராக வெளியிட்டிருப்பது, படத்தின் பெயரை சர்கார் என அமைத்திருப்பது எல்லாமே படத்திற்கு முந்தைய சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது என்பதை உணர்த்துகிறது.
குறிப்பாக திரைப் பிரபலங்கள் அரசியலுக்கு வரும் வேளை இது! கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் தங்கள் அரசியல் பிரவேசத்தை வெளிப்படையாக அறிவித்துவிட்ட நிலையில், விஜய் வரவும் அவரது ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் நீண்ட காலமாகவே தனது ரசிகர்களை அரசியலுக்கு தயார் படுத்தியும் வருகிறார். இந்தச் சூழலில் அரசியலை குறிக்கும் விதமாக படத்திற்கு சர்கார் என பெயர் வைத்திருப்பதும், சிகரெட்டை பற்ற வைக்கும் காட்சியும் சில குறியீடுகளை கொண்டிருக்கின்றன. அவை விவாதங்களாகவும் வடிவெடுக்கலாம்.
ஏற்கனவே நடிகர்கள் புகைப் பிடிக்கும் காட்சிகளை தவிர்க்க வேண்டும் என்கிற பிரசாரத்தை பாமக.வின் அன்புமணி உள்ளிட்டோர் முன்னெடுத்த நிலையில் விஜய் தனது ஃபர்ஸ் லுக் காட்சியையே சிகரெட் பற்ற வைப்பதாக வெளியிட்டிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.