TTV Dinakaran Daughter Marriage Sasikala Plans to Operate August Attack News in Tamil : அதிமுக வில் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்று அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களுமே குழப்பத்தில் இருந்து வருகின்றனர். அவ்வப்போது அதிமுக தலைமைக்குள் நிகழ்ந்து வந்த சலசலப்புகள் அனல் பறந்தும், சில நாள்களில் புஸ்வானமாகியும் வந்தது. இதனிடையே, தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக சார்பாக யார் முதல்வர் வேட்பாளராக முன்னிருந்தப்படுவார் என்ற சர்ச்சை கிளம்பிய நிலையில், கட்சி நிர்வாகிகளின் ஏகோபித்த ஆதரவோடு எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளரானார். தேர்தல் சமயத்தில் எந்த சலசலப்புகளும் வேண்டாம் என ஓ.பி.எஸ் சர்ச்சையை கிளப்பாமல் தேர்தல் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார்.
அதிமுக தேர்தலில் தோல்வியடைய, ஆட்சி அதிகாரத்தில் எதிர்க்கட்சிக்கான முக்கியத்துவம் வாய்ந்த பதவியான எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. மீண்டும், அதிமுக எம்.எல்.ஏகக்ளின் அமோக ஆதரவோடு எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவரானார். அதிமுக வில் தனது நிலை என்னவென்று உணர்ந்த பன்னீர்செல்வம் அமைதியாக எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்டம் கட்டும் வேளையில் இறங்கினார். அதிமுக வை ஒற்றை தலைமைக்குள் கொண்டு வர ஓபிஎஸ் முயற்சிக்க, எடப்பாடியும் தன் பங்குக்கு காய் நகர்த்த தொடங்கினார்.
இருவருக்குமான பனிப்போர் அவ்வப்போது ஏற்பட, இருவருள் ஒருவர் சமாதான கொடியை அடுத்த சில நாள்களிலேயே அசைக்க ஆரம்பித்துவிடுவர். உதாரணமாக, எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி தேர்ந்தெடுக்கப்பட்ட பின், அவர் மீது பன்னீர் காட்டத்தில் இருப்பார் என பேசப்பட்டு வந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல அவர் வீட்டுக்கே சென்றது திருப்பு முனையாக தான் அமைந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஓபிஎஸ் பங்கேற்காத மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி நடத்தினார். இது பெரும் அதிர்வலைகளை அதிமுக வில் ஏற்படுத்த, அடுத்த சில நாள்களுக்குள் தனியார் விடுதியில் இருவரின் சந்திப்பும் நிகழ்ந்துள்ளது.
அதிமுக வில் இப்படி காட்சிகள் அரங்கேறியிருக்க, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா கடந்த ஜனவரியில் விடுதலையானார். சசிகலா விடுதலையை தொடர்ந்து, தமிழக அரசியல் களம் அனல் பறக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டதோடு கப்சிப் ஆனார் சசிகலா. அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா அறிவித்திருந்தாலும், தேர்தலுக்கு பின், அதிமுக வில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இந்த நிலையில், தற்போது அதிமுக மற்றும் அமமுக தொண்டர்களிடையே சசிகலா உரையாடும் ஆடியோக்கள் தொடர்ந்து வெளியாகி, அதிமுக வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக வில் சசிகலா சர்ச்சையை ஏற்படுத்த உள்ள நிலையில், ஓபிஎஸ் அவர் பக்கம் சென்று விடுவார் என்ற ஐயம் பழனிச்சாமிக்கு ஏறபட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா குறைந்த பிறகு தமிழகம் முழுவதும் சசிகலா சுற்றுப் பயணம் மேற்கொண்டு அரசியல் பிரவேசம் மேற்கொள்ள உள்ளார் எனவும் சசிகலாவுக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இதனிடையே, தினகரன் மகள் கல்யாணத்தையும் தனக்கான அரசியல் ஆயுதமாக சசிகலா கையில் எடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும், காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான பூண்டி துளசி ஐயா வாண்டையாரின் பேரனான ராமநாதன் துளசி அய்யாவுக்கும் திருமணம் கடந்த ஆண்டு நிச்சயிக்கப்பட்டது. இந்த மாதம் 13-ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில், கொரோனா சூழல் காரணமாக ஆக்ஸ்ட் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா விடுதலையானது முதல் அவரை அதிமுக வில் மீண்டும் சேர்க்க, பன்னீர்செல்வம் பெரும்பாடு பட்டார். எடப்பாடிக்கும் பன்னீருக்கும் அதிகாரம் தொடர்பான பனிப்போர் ஏற்பட்டுள்ள நிலையில், இவற்றை பயன்படுத்தி அதிமுக வில் ரீஎண்ட்ரி கொடுக்க சசிகலா ஆயத்தமாகி வருகிறார்.
அதற்கு ஏற்றார் போல, டிடிவி தினகரனின் மகள் திருமணத்திற்கு அதிமுக சார்பில் யார்யாருக்கு எல்லாம் அழைப்பு விடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சசிகலாவுக்கு ஆதரவான நிலையில் உள்ளதாக கருதபப்டும் பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்படலாம் எனவும், அதிமுக நிர்வாகிகளுக்கு நட்பு அடிப்படையிலாவது அழைப்பு விடுக்கப்படலாம் எனவும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியின் மூலம் சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படும் முக்கிய நிர்வாகிகள் பலரும் வெளிப்படையாக சசிகலா பக்கம் திரும்புவார்கள் எனவும் அவர் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார். மேலும், ஒரு திருப்பமாக, காங்கிரஸ் முக்கிய தலைவர் மகனுடன் தினகரனின் மகள் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் அரசியல் நாகரீகம் கருதியாவது அழைக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பையும் கிளப்பியுள்ளது.
தமிழகத்தை உலுக்கிய கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் குறைந்துள்ளதை போல, தற்போது தணிந்திருக்கும் அதிமுக ஆரவாரங்கள் சசிகலாவின் ‘ஆகஸ்ட் அட்டாக்’ மூலம் மீண்டும் அனல் பறக்க காத்துக் கொண்டிருப்பதாகவே அதிமுக வட்டாரங்களிலும், சசிகலா தரப்பிலும் பேசப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.