சசிகலா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்பு தொண்டர்களே கலங்க வேண்டாம். வரும் காலம் நமக்கானது. அனைவரும் வாருங்கள் வெற்றி அடைவோம், புதிய சகாப்தம் படைப்போம்! நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருப்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வேதனை.
தமிழக மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லாமல், ஏற்கனவே ஐந்து வருடங்களை வீணாக்கிய திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால், இனி வரும்காலங்களிலும் தமிழக மக்களுக்கு எந்தவித பிரயோஜனமும் ஏற்படாது என்பது இப்போதே தெரிந்துவிட்டது.
திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை ஏமாற்றி பெற்ற வெற்றியாகத்தான் இதை கருதமுடிகிறது. மேலும், “ஊரு ரெண்டு பட்டால், கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்ற கதையாக எங்கள் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகளைப் பயன்படுத்திக் கொண்டு திமுக அதில் குளிர் காய்ந்து பெற்ற வெற்றியாகத்தான் இதை பார்க்கமுடிகிறது.
தமிழ்நாட்டு மக்கள் திமுக தலைமையிலான மூன்றாண்டு கால ஆட்சியில் கடுமையாக பாதிப்படைந்து இருக்கிறார்கள். திமுகவினர் நாள்தோறும் தமிழக மக்களை கசக்கி பிழிந்து அவர்களுக்கு மிகப்பெரிய கொடுமையை அளித்து வருகின்றனர்.
எனவே, மக்களிடம் நன்மதிப்பை பெற்று வெற்றி பெறுவது என்பது நடக்காத ஒன்று என்பதை நன்றாக அறிந்த திமுகவினர், எதிர்கட்சியினரை பிளவுபடுத்தி அதன் மூலம் வெற்றி பெறலாம் என்று திட்டமிட்டு இந்த இயக்கத்தை ஒன்றிணையாமல் பார்த்துக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.
இயக்கத்தில் இருக்கும் ஒரு சில நிர்வாகிகள் கட்சி நலனை புறம்தள்ளிவிட்டு சுயநலப்போக்கோடு செயல்பட்டு இயக்கத்தை தொடர்ந்து தோல்வி அடைய வைப்பதால், கோடான கோடி தொண்டர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிறது.
தமிழக மக்கள் முன்னேற வேண்டும் என்ற உண்மையான எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் வாருங்கள். ஒரு ஒளிமயமான எதிர்காலம் காத்துக்கொண்டு இருக்கிறது. மீண்டும் அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவதே நமது இலக்கு.
வரும் 2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் கழகம் வெற்றிபெறுவதை யாராலும் தடுக்க முடியாது. தமிழக மக்களின் நலன் கருதி ஒற்றுமையோடு இணைந்து பணியாற்ற அனைவரும் வர வேண்டும். உங்கள் அனைவரையும் “ஜெயலலிதா இல்லம்” அன்புடன் வரவேற்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் க. சண்முக வடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“