அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5, 2016-ல் மறைந்த பிறகு, முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். பின்னர், அவர் ராஜினாமா செய்த பிறகு, சசிகலா சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக பதவியேற்க இருந்த நிலையில், ஓ.பி.எஸ். சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் தொடங்கினார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டனர். சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் 10 கோடி அபராதமும் விதித்தது. அதனால், அவருடைய ஆதரவாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். சில மாதங்களிலேயே, ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைந்தனர். சசிகலா, டிடிவி தினகரன் அவர்கள் குடும்பத்தினர் அனைவரையும் அதிமுகவில் இருந்து நீக்கினார்கள். சசிகலாவின் சகோதரி மகன் டிடிவி தினகரன் ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று அமமுகவைத் தொடங்கினார்.
இதனிடையே, திமுகவிலும் அக்கட்சி தலைவர் மு.கருணாநிதி ஆகஸ்ட் 7, 2018-ல் மறைந்தார். திமுகவில் மு.க.ஸ்டாலின் தலைவரானார்.
இப்படி தமிழக அரசியலில் ஒரு சினிமா காட்சிகளைப் போல இந்த 4 ஆண்டுகளில் பல நிகழ்ச்சிகள் வேகவேகமாக நடந்துவிட்டன.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்கலில் சட்டமன்றத்த் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில்தான், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு மத்திய சிறையில் இருந்த சசிகலா, கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தண்டனைக் காலம் முடிந்து ஜனவரி 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
ஜெயலலிதாவின் தோழி சசிகலா விடுதலை ஆவதற்கு முன்பு, அவர் விடுதலையானால் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும். அதிமுகவில் உள்ள பலரும் சசிகலாவின் ஆதரவாளர்களாக செல்வார்கள் என்று தமிழக அரசியல் மேடைகளில் பேசப்பட்டது. சிலர், திமுகவை எதிர்க்க அதிமுக அமமுக ஒன்றாக இணையும் என்று யூகங்களையும் கூறினார்கள். இதனால், சசிகலாவின் விடுதலை பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், அவர் ஜனவரி 27ம் தேதி விடுதலை ஆவதற்கு முன்னதாகவே சிறையில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆகி கட்சி தொண்டர்களை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது, “சசிகலாவை அதிமுகவில் சேர்க்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை” என்று கூறி சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
சசிகலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆனால், அரசியல் மேடைகளில் பேசப்பட்டதைப் போன்று அதிமுகவில் அமைச்சர்கள் யாரும் சசிகலாவை வரவேற்க அறிக்கைகளை விடவில்லை. ஆதரவும் தெரிவிக்கவில்லை. சில அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை வரவேற்று சுவரொட்டி, பேனர் வைத்ததற்கு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில்தான், அமமுகவின் செய்தித்தாளான டாக்டர் நமது எம்.ஜி.ஆர் ‘ஆணைகள் இட்டு யார் தடுத்தாலும்’ என்று தலைப்பிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக தாக்கி கட்டுரை வெளியிட்டுள்ளது. இதனால், அதிமுக - அமமுக இணைப்பு என்ற அரசியல் யூகம் வெறும் யூகமாக மாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
டாக்டர் நமது எம்.ஜி.ஆர் செய்தித்தாளில் சிவகிரி என்பவர் எழுதியதாக ‘ஆணைகள் இட்டு யார் தடுத்தாலும்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், “எத்தனை தீயசக்திகளோடு சேர்ந்து துரோகக் கூட்டங்கள் தீட்டினாலும் அவை புஸ்வாணம் ஆகிவிடும் என்றும், பதவிக்கு வரும் வரை மண்டியிட்டு, கைகட்டி, சரணாகதி அடைந்து நிற்பதும், பதவி கிடைத்து விட்டதும் பச்சை சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் துரோகிகளுக்கு நாவடக்கம் வேண்டும்” என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “சீண்டுவார் இன்றி கிடந்தவரை சிம்மாசனத்தில் அமர வைத்த தியாகத் தலைவிக்கு காட்டும் விசுவாசும் இது தானா ?” எனவும் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதற்கு 100% வாய்ப்பில்லை என மனசாட்சியை விற்றுவிட்டு, நன்றி கெட்ட மனிதராக வலம் வருபவர்களுக்கும் உண்ட வீட்டிற்கே ரெண்டகம் செய்யும் துரோகிகளும் சரித்திரத்தில் நம்பிக்கை துரோகிகள், பச்சோந்திகள் என்றே அடையாளப்படுத்தப்படுவார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிடாமல் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.
தனியாக நின்று டெபாசிட் வாங்கக்கூட யோக்கியதை இல்லாத பச்சோந்தி கூட்டங்கள் ஆணைப்போட்டு தடுத்தாலும், உங்களால் கோட்டை ஏறமுடியாது என பாஜக-வையும் அந்த கட்டுரை மறைமுகமாக சாடியிருக்கிறது.
அந்த கட்டுரையின் இறுதியில், “பதவி வெறி, பேராசைகளை விடுத்தும், ஆணைகளை உடைத்தெறிந்தும் தொண்டர்கள் எதிர்ப்பார்க்கும் முடிவினை எடு ; சுயமாக சிந்தனை செய்; சின்னம்மாவை ஒரு சேர கூடி வரவேற்போம்” என்று அதிமுக – அமமுக இணைப்பிற்கு டாக்டர் நமது எம்.ஜி.ஆர் செய்தித்தாள் மறைமுக அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நமது எம்.ஜி.ஆர் செய்தித்தாள் கடுமையாக தாக்கி விமர்சித்திருப்பதால் அதிமுக - அமமுக இணைப்பு என்பது பெரும் கேள்விக்குறியாகி உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.