/indian-express-tamil/media/media_files/2025/03/11/DhNfocqR5r7dszDP3csY.jpg)
தஞ்சை ஒரத்தநாட்டைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சரான வைத்திலிங்கம் தற்போது அதிமுக உரிமை மீட்பு குழுவான ஓ.பி.எஸ் அணியில் இருக்கிறார். உடல் நலக்குறைபாடு தொடர்பாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த வைத்திலிங்கம் ஒரத்தநாடு அருகே உள்ள தெலுங்கன்குடிகாட்டில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஒரே சமயத்தில், தனி தனியாக சசிகலா, தினகரன் ஆகியோர் வைத்திலிங்கத்தை நேரடியாக சந்தித்து பேசினர்.
வைத்திலிங்கம் உடல்நலம் குறித்த விசாரிப்புதான் என சொல்லப்பட்டாலும் இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தினகரன் பார்த்து விட்டுச்சென்ற பிறகு தனது தம்பி திவாகரனுடன் வந்து வைத்திலிங்கத்தை சந்தித்தார் சசிகலா. அப்போது ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசி வைத்திலிங்கம், அம்மா இருந்திருந்தா இவர் இருந்திருக்கும் இடமே வேறயா இருந்திருக்கும் என அங்கிருந்தவர்களிடம் வைத்திலிங்கம் குறித்து சசிகலா பேசினார்.
அதற்கு வைத்திலிங்கமும் உங்கள் மீதும் எனக்கு பெரும் மரியாதை உள்ளது. எனக்கான தனித்த அடையாளத்தை தந்தது நீங்கள் தான் என பதிலுக்கு நெகிழ்ச்சியில் உருகியதாக அவரது விசுவாசிகள் தெரிவித்தனர்.
2 வருடங்களாகவே, வைத்திலிங்கம், சசிகலா, தினகரனுடன் நட்பு பாராட்டுகிறார். அதிமுக இணைப்பு குறித்து பலர் மூலம் அவர் அதிமுக முன்னாள் அமைச்சர்களிடம் தூதுவிட்டு வந்ததாக சொல்கிறார்கள். இப்படியான சூழலில் மூவரின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதிமுகவிற்குள் குழப்பத்தை ஏற்படுத்தவே இதன் நோக்கம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
வைத்தியலிங்கத்தை சந்தித்த பின்னர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "வைத்திலிங்கத்திற்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பு குறித்து விசாரிக்க வந்தோம். இச்சந்திப்பில், வேறு ஏதும் இல்லை. அதிமுக பழனிச்சாமியிடம் உள்ளதால் பலவீனமாகி வருகிறது. தேர்தலுக்கு பிறகு பழனிச்சாமி அதிமுகவுக்கு மூடு விழா நடத்தி விடுவார். ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, தேசிய ஜனநாயக கூட்டணி அமைப்பார்கள். பழனிச்சாமியிடம் உள்ள தொண்டர்களும், நிர்வாகிகளும் விழித்துக் கொள்ளவில்லை என்றால், தேர்தலுக்குப் பிறகு அதை மீட்கின்ற பொறுப்பு எங்களிடம் வரும்" என்றார்.
அதேபோல், வைத்திலிங்கத்தை சந்தித்த சசிகலா செய்தியாளர்களிடம் பேசுகையில்: "இந்த சந்திப்பு என்பது அனைத்தும் கலந்தது. அ.தி.மு.க மக்களுக்காக ஆரம்பித்த இயக்கம். தி.மு.க., போல் இல்லை. நல்ல ஆட்சியை 2026ல் கொடுப்போம். அது மக்களாட்சியாக இருக்கும். அ.தி.மு.கவை சுக்குநுாறாக உடைத்து விடலாம் என்று வெளியில் சில பேர் நினைக்கலாம், அது எப்படி என்றால் கடலில் இருக்கும் தண்ணீரை ஒரு பக்கெட்டில் எடுத்து வெளியேற்றிவிடுவேன் என்பது போல் தான். அ.தி.மு.க.,வை பொறுத்தவரை ஒருத்தர் முடிவு செய்யும் விஷயம் இல்லை. அடிமட்ட தொண்டன் என்ன முடிவு செய்கிறார்களோ அதுதான் அ.தி.மு.கவில் நடக்கும். அதை நாங்கள் நல்லபடியாக செய்வோம்.
தி.மு.க, மத்திய அரசு என்று பார்த்தால் தான் இங்கு ஆட்சி சரிவர நடத்த முடியும். நீங்கள் சண்டை போடுவதற்காக மக்களின் வாக்குகளை பெற்று நாடளுமன்றத்தில் உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்றால், வரும் 2026ல் அதற்கு உண்டான பதிலை தமிழக மக்கள் நிச்சயம் கொடுப்பார்கள். திமுகவினர், அரசை சரியாக நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் செய்யும் தவறை வெளியே போகாமல் மாற்றும் முயற்சியில் இது மாதிரி வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். தி.மு.க அரசின் ஒரு துளி விஷயம் தான் வெளியே வந்து உள்ளது. 2026 தேர்தலுக்கு முன் நிறைய விஷயங்கள் வெளியே வரும்" என்றார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.