அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி இறந்ததையடுத்து, அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனும் ஓ.பி.எஸ்ஸை தனியாக சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.
டிசம்பர் 5, 2016ம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுகவுக்குள் அணி பூசல்களும் பணிப்போர்களும் எப்போதும் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ இருந்து வருகிறது.
சசிகலா நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் போனில் பேசிய ஆடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் இறப்பதற்கு முன்பு மருத்துவமனையில் இருந்தபோது அதிமுக கொடி பொருத்திய காரில் சென்று மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். சசிகலா அதிமுக கொடியைப் பயன்படுத்துவதற்கு அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இடையே பணிப்போர் நிலவி வந்தாலும் அவர்கள் சசிகலாவை எதிர்ப்பதில் உறுதியாக இருந்தனர்.
இந்த சூழலில்தான், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி செப்டம்பர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஓ.பி.எஸ்.க்கு ஆறுதல் தெரிவித்தனர். அதே நேரத்தில், ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இணைந்த பிறகு, அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா நேரில் சென்று ஓ.பி.எஸ் மனைவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது, ஓ.பி.எஸ் சசிகலாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்ணீர்விட்டார். சசிகலாவும் ஆறுதல் கூறினார். அப்போது, அங்கே வந்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சிலர் சசிகலாவுக்கு முண்டியடித்துக்கொண்டு வணக்கம் கூறினார்கள். இந்த நிகழ்வு அதிமுகவில் அப்போதே சலசலப்பை ஏற்படுத்தியது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.ஸின் மனைவியின் திடீர் மரணம் அதிமுகவின் எதிர் முகாம்களை நெருக்கமாகக் கொண்டுவந்துள்ளது என்று அதிமுக மற்றும் மற்றும் அமமுக உறுப்பினர்கள் கூறுகின்றனர். இது குறித்து அதிமுக நிர்வாகி ஒருவர், “இது தலைவர்கள் ஒன்றிணைவதுதான் வேறு ஒன்றுமில்லை” என்று கூறினார்.
இந்த முறை ஓ.பி.எஸ் – சசிகலா இரு முகாம்களுக்கு இடையேயான தொடர்பு ஊடகங்களின் வெளிச்சத்திற்கு மத்தியில் பகிரங்கமாக நடந்தது. முன்னதாக, ஒ.பி.எஸ் மனைவி விஜயலட்சுமியின் உடல் சென்னையில் தனியார் மருத்துவமனையில் இருந்தபோதே சசிகலா நேரில் சென்று சந்தித்தார். ஓ.பி.எஸ் மனைவி உடல் அடக்கம் செய்யப்பட்ட தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தினகரன் ஓ.பி.எஸ்-ஐச் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனால், “இந்த இரண்டு முகாம்களும் தொடர்பில் இருக்கிறார்களா என்று யூகிக்க வேண்டியதில்லை” என்று ஒரு அதிமுக நிர்வாகி கூறினார்.
கடந்த 4 ஆண்டுகளில் முதல் முறையாக ஓ.பி.எஸ் – சசிகலா , தினகரன் ஆகிய 3 தலைவர்களும் சந்தித்துள்ளனர். பிப்ரவரி 2017ல், அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வம் சசிகலாவைத் தேர்ந்தெடுக்க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். சட்டமன்ற கட்சியின் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஓ.பி.எஸ் எதிராக கிளர்ச்சி செய்தார்.
இதையடுத்து 5 மாதங்களுக்குப் பிறகு, ஓ.பி.எஸ் 2017 ஆகஸ்ட் மாதத்தில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் கைகோர்த்தார். அதன் பிறகு, ஓ.பன்னீர் செல்வம் கடந்த அதிமுக துணை முதலமைச்சராக இருந்தார். மார்ச், 2018-ல் சசிகலாவின் கணவர் ம.நடராஜன் இறந்தார். அப்போது நடராஜன் மரணத்திற்கு அதிமுகவைச் சேர்ந்த யாரும் இரங்கல் தெரிவிக்கவில்லை. ஆனால், இப்போது, ஓ.பி.எஸ் மனைவியின் மறைவுக்கு சசிகலாவும் டி.டி.வி தினகரனும் நேரில் சென்று அஞ்சலி தெரிவித்ததோடு தனியாக சந்தித்து ஆறுதலும் கூறியுள்ளனர்.
ஓ.பி.எஸ் மனைவியின் உடல் மருத்துவமனையில் இருந்தபோது சசிகலா அங்கே வந்தபோது, அங்கே அவரைப் பார்க்க விரும்பவில்லை. அதனால்தான் அவர் வருவதற்கு முன்பே நாங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறினோம் என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணிப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் முகாம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
அதிமுகவில், தற்போது சலசலப்பை ஏற்படுத்திய விவகாரம் என்னவென்றால், கொடநாடு எஸ்டேட் கொலை – கொள்ளை வழக்கு குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்திவரும் சூழலில் சமீபத்திய நிகழ்வுகள் நடந்துள்ளன. இருப்பினும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த நடவடிக்கைக்குப் பின்னால் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்று கூறினார். கொடநாடு விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
டி.டி.வி தினகரனின் மகள் திருமணத்திற்குப் பிறகு உற்சாகமான அரசியல் நிகழ்வுகள் நடக்கும் என்று அதிமுக நிர்வாகி ஒருவர் தனது எதிர்பார்ப்பை தெரிவித்தார்.
இருப்பினும், அதிமுகவில் சசிகலாவுக்கோ அல்லது ஓ.பன்னீர்செல்வத்துக்கோ பெரிய அளவில் ஆதரவு இல்ல என்றும் தற்போது முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு இருப்பதாகத் தெரிகிறது.
எப்படியானாலும், ஓ.பி.எஸ்ஸின் மனைவி விஜயலட்சுமி மறைவைத் தொடர்ந்து, சசிகலாவும் டி.டி.வி தினகரனும் ஓ.பி.எஸ்ஸை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த நிகழ்வு அதிமுகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டும் வெளிப்படையாக தெரிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“