யார் எட்டப்பர் என்பதை தொண்டர்களும் மக்களும் முடிவு செய்வார்கள் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இரட்டை தலைமை விவகாரம் பெரிதாக வெடித்தது. இந்நிலையில் ஜீன் 23ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் சட்டத்துக்கு எதிராக நடத்தப்பட்டது என்று கூறி பன்னீர் செல்வம் புறக்கணித்தார். இந்நிலையில் கடந்த ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டப்பட்டது. இதற்கு எதிராக நீதிமன்றத்தை ஓபிஎஸ் நாடியபோது, அவர் தோல்வியை தழுவினார். இதனால் அவர் அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்ற முயற்சித்தார். இதனால் கலவரம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அலுவலகத்தை பூட்டினர். மேலும் பன்னீர் செல்வம் மற்றும் அவருடன் இருப்பவர்களை கட்சியின் அடிப்படை பதவியிலிருந்து, நீக்குவதாக பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தன்னை நீக்கியவர்களை தானும் நீக்குவதாக பன்னீர் செல்வம் பேட்டி அளித்தார்.
இந்நிலையில் சசிகலா மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்தபோது “ நான் ஏற்கனவே பொதுச் செயலாளர் தான். அவர்கள்தான் சண்டை போடுகிறார்கள். எட்டப்பர் யார் என்பதை தொண்டர்களும் மக்களும் முடிவு செய்வார்கள். அதிமுக பொன்விழா ஆண்டில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு அதிமுக அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. திமுக அரசு தேர்தலில் அளித்த பெரும்பான்மையான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர். எதிர்க்கட்சி என்று சொல்பவர்கள் தற்போது உட்கட்சிக்குள்ளே சண்டை போடுவதால் வருகின்ற தேர்தலில் பொதுமக்கள் எப்படி ஓட்டு போடுவார்கள்” என்று அவர் கூறினார்.
இந்நிலையில் விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டத்தில், 2021 தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு எட்டப்பர்களே காரணம் என்றும் எட்டப்பர்களை வைத்து அதிமுகவை வீழ்த்த நினைத்தால் அது நடக்காது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்நிலையில் சசிகலா அதற்கு பதிலளித்துள்ளார்.