சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள சசிகலா உள்ளிட்டவர்களின் மறு சீராய்வு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைபட்டிருக்கிறார்கள். அண்மையில் சிறை அதிகாரிகளுக்கே லஞ்சம் கொடுத்து சிறையில் சொகுசு வசதிகளை சசிகலா பெற்றதாக பெங்களூரு டி.ஐ.ஜி. ரூபா கூறிய குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. சிறையில் இருந்து சசிகலாவும், இளவரசியும் வெளியில் சென்று திரும்பும் காட்சிகள் நேற்று முன் தினம் டிவிகளில் வெளியானது.
இந்தச் சூழலில் சட்டரீதியாக தங்களுக்கு உள்ள கடைசி வாய்ப்பான சீராய்வு மனுவை சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில், ‘லஞ்ச வழக்குகளில் அரசு ஊழியரைத்தான் தண்டிக்க முடியும். இந்த வழக்கில் அரசு ஊழியரான ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவரை உச்ச நீதிமன்றம் விடுவித்துவிட்டது. எனவே எங்களை தண்டிப்பது நியாயமல்ல. எங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கவேண்டும்’ என கேட்டிருந்தனர்.
முகுல் ரோத்தகி
நீதிமன்ற நடைமுறைப்படி, தண்டனை வழங்கிய நீதிபதிகளே சீராய்வு மனுவையும் விசாரிப்பார்கள். இதர வழக்குகளைப் போல திறந்த நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் விசாரிக்கப்படுவதில்லை. நீதிபதிகளில் அறையில் சம்பந்தப்பட்ட நீதிபதிகள் மட்டுமே அமர்ந்து அந்த மனுவை ஆய்வு செய்வார்கள். இதில் வழக்கறிஞர்கள் வாதம் எதுவும் நடைபெறாது.
சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரைப் பொறுத்தவரை இவர்களுக்கு தண்டனை வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான பினாகி சந்திரகோஷ் ஓய்வு பெற்றுவிட்டார். எனவே தீர்ப்பளித்தவர்களில் மற்றொரு நீதிபதியான அமித்தவராயுடன், ரோஹின்டன் நாரிமன் இந்த சீராய்வு மனுவை ஆகஸ்ட் 2-ம் தேதி விசாரிக்க பட்டியல் இடப்பட்டது.
இவர்களில் நீதிபதி ரோஹின்டன் நாரிமன், கர்நாடகாவை சேர்ந்த மூத்த சட்ட நிபுணரான பாலி நாரிமனின் மகன் ஆவார். சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா உத்தரவு அடிப்படையில் ஜெயலலிதா சிறைக்கு சென்றபோது, அவருக்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடி ஜாமீன் பெற்றுக் கொடுத்தவர் பாலி நாரிமன். எனவே சசிகலாவின் சீராய்வு மனுவை பாலி நாரிமனின் மகனான நீதிபதி ரோஹின்டன் விசாரிக்க இருந்தது சர்ச்சையை கிளப்பியது.
பிரசாந்த் பூஷன்
பொதுநல வழக்குகளை நடத்துபவரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகஸ்ட் 1-ம் தேதியே இதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றார். ‘தந்தை ஆஜராகிய வழக்கில் மகன் நீதிபதியாக இருந்து தீர்ப்பு சொல்வது சரியல்ல’ என அவர் சுட்டிக்காட்டினார்.
அதேபோல அண்மையில் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் பதவியில் இருந்து விலகியவரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியும் அதே கருத்தை முன்வைத்து தலைமை நீதிபதி கேஹரிடம் முறையிட்டார். இதைத் தொடர்ந்து ரோஹின்டன் நாரிமன் இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து ஒதுங்கினார்.
இந்த நிலையில், சசிகலாவின் மறு சீராய்வு மனுவை நீதிபதிகள் அமித்தவா ராய், பாப்தே அடங்கிய அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.
அரசியல் முக்கியத்துவம்
சீராய்வு மனு மீதான தீர்ப்பு தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவின் பொது செயலாளராக சசிகலா இருக்கிறார். அவருக்கு பொது செயலாளர் பதவி வழங்கியது செல்லாது என்று போராடிய ஓ.பன்னீர் செல்வமும், அவரால் முதல் அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியும் ஒன்றாக இணைந்துவிட்டனர்.
ஓபிஎஸ்-ன் கோரிக்கையை ஏற்று ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரிக்க தனி நீதிபதி விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார்.
ஒருவேளை சசிகலா ஜெயிலில் இருந்து விடுதலையானாலும், அதிமுக பொதுசெயலாளராக தொடர முடியுமா? அவர் கட்சி அலுவலகத்துக்கு வந்து செயல்பட அனுமதிப்பார்களா என்ற கேள்வி எழுகிறது.
ஒருவேளை தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டால், சசிகலாவை பொது செயலாளர் பதவியில் இருந்து நீக்கி வைக்க அதிமுக பொதுக்குழுவை கூட்டுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.