கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்காதவருக்கு ரூ.1000 கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது எப்படி என வி.கே.சசிகலா கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் செப்டம்பர் 15 தேதி தொடங்கி வைத்தார். இதற்காக கடந்த 2 மாதங்களாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, தகுதி பட்டியல் தயாரிக்கப்பட்டது. தகுதி பட்டியலில் உள்ளவர்களுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அவர்களின் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், விண்ணப்பிக்காதவருக்கு ரூ.1000 கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது எப்படி என சசிகலா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, எங்கள் வீட்டில் உள்ள தம்பி ஒருவர், மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பமே செய்யல. ஆனால் உங்கள் வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தப்பட்டுவிட்டது என அவருக்கு எஸ்.எம்.எஸ் வந்துருக்கு. விண்ணப்பமே செய்யாதபோது இது எப்படி சாத்தியம். இவருடைய வங்கி கணக்கில் விவரங்கள் அவர்களுக்கு எப்படி தெரியும்.
ஆக இதுபோல் தமிழகம் முழுவதும் நடந்திருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. இவர்களால், இந்த ஆயிரம் ரூபாயை கொடுக்க முடியாது என்பதைத் தான் நான் சொல்லி வருகிறேன். இப்ப வந்த கணக்குல ஆயிரம் ரூபாய் வந்து விட்டதாக காட்டி, எழுதியே கணக்கு காண்பிச்சிறலாம் என நினைக்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது. விண்ணப்பிக்காதவருக்கு எப்படி மெசேஜ் வரும், இவ்வாறு சசிகலா கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“