scorecardresearch

ரூ.280 கோடிக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றினார்களா சசிகலா குடும்பத்தினர்?

திவாகரன், விவேக், கிருஷ்ணபிரியா ஆகியோர் தொடர்புடைய இடங்களில் இருந்துதான் அதிகமான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது

ரூ.280 கோடிக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றினார்களா சசிகலா குடும்பத்தினர்?

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சசிகலா குடும்பத்தினரால் ரூ.280 கோடிக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விவேக், கிருஷ்ணபிரியா வீடுகளில் 4 நாட்களாக நடத்தப்பட்ட சோதனை நிறைவடைந்தது.

சசிகலா, திவாகரன், டிடிவி தினகரன், விவேக், கிருஷ்ணபிரியா உட்பட அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் என பலரது வீடுகளில் கடந்த 9-ம் தேதி முதல் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களில் மொத்தம் 187 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 3 நாளில் 167 இடங்களில் சோதனை நடத்தி முடிக்கப்பட்டது. 4-வது நாளான நேற்று 20 இடங்களில் சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டது. சென்னையில் ஜெயா டிவி அலுவலகம், ஜெயா டிவியின் முதன்மை நிர்வாக அதிகாரியான விவேக்கின் கோடம்பாக்கம் வீடு, கிண்டியில் உள்ள ஜாஸ் சினிமாஸ் நிர்வாக அலுவலகம், இளவரசி மகள் கிருஷ்ணபிரியாவின் தி.நகர் வீடு, படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை ஆகிய இடங்களில் நேற்று 4-வது நாளாக சோதனை நடைபெற்றது.

இந்த நிலையில், இன்று ஐந்தாவது நாளாக சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அளித்த தகவலில், “நான்கு நாட்களாக வந்த வருமான வரி சோதனை ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. அனைத்து இடங்களிலும் சோதனை நிறைவு பெற்று வருகிறது. பல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் வாங்கி வருகிறோம்” என்றார்.

மேலும், கடந்த 4 நாட்களாக நடந்த சோதனையில் ஆயிரக்கணக்கான சொத்து ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. போலி நிறுவனங்கள் நடத்தியதற்கான ஆவணங்கள், பணப் பரிமாற்றம் செய்ததற்கான தகவல்கள், பென்டிரைவ், ஹார்டுடிஸ்க், வங்கி ஆவணங்கள் உட்பட பலவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனராம்.

குறிப்பாக, கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக 50 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த 50 நாட்கள் இடைவெளியில் சசிகலா குடும்பத்தினர், அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் மொத்தம் ரூ.280 கோடிக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் உள்ள நகைக்கடை மூலம் மட்டுமே ரூ.168 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றியுள்ளனர் என அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

மேலும், சோதனையில் கிடைத்த ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி முழுமையாக முடியவில்லை. அந்தப் பணி முடிந்த பின்னரே மொத்த விவரமும் தெரியவரும். திவாகரன், விவேக், கிருஷ்ணபிரியா ஆகியோர் தொடர்புடைய இடங்களில் இருந்துதான் அதிகமான ஆவணங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Sasikala family changed rs 280 crore into new notes during demonetization period

Best of Express