நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு பிறகு தமிழகம் வந்துக் கொண்டிருக்கும் சசிகலா, வாணியம்பாடி வழியாக சென்னை வரும் வழியில் நெக்குந்தி அருகே செய்தியாளர்களிடம் பேசினார்.
சசிகலா பேச்சின் முக்கிய சாரம்சங்கள் பின்வருமாறு:
என் உடல் பூரண நலம் பெற வேண்டிய வாழ்த்திய அத்துணை நல்ல உள்ளங்களுக்கும் முதலில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
தெய்வ அருளாலும், மக்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் ஆசியாலும், நான் இந்த கொரோனாவில் இருந்து மீண்டும் வந்திருக்கிறேன்.
உடல்நலம் பூரண குணமடைய உதவிய கர்நாடக அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கர்நாடகா அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெயலலிதா சொன்னது போல், எனக்குப் பின்னாலும் இந்த அ.இ.அ.திமுக இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் தழைத்தோங்கி இருக்கும் என்ற அந்த நல்ல எண்ணத்தை தொடர..
என் வாழ்நாள் முழுவதுமே கழகமே குடும்பம், குடும்பமே கழகமாக எஞ்சியிருக்கும் என் வாழ்நாளை கழக முன்னேற்றத்திற்கு அர்ப்ப்பணிப்பேன்.
ஜெயலலிதாவின் பிள்ளைகள், என்றும் எனக்கும் பிள்ளைகள்தான். கழகம் எத்தனையோ முறை சோதனைகளைச் சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் பீனிக்ஸ் பறவையாக கழகம் மீண்டெழுந்திருக்கிறது.
அதேபோல், எம்ஜிஆரின் பொன்மொழிக்கேற்ப, செயலலிதாவின் வழிவந்த ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் ஒற்றுமையாக ஒரு அணியில் நின்று...
நமது பொது எதிரியை மீண்டும் தமிழக ஆட்சிக்கட்டிலில் அமர விடாமல் வீழ்த்தி ஒற்றுமையோடு இணைந்து செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம், என்னுடைய குறிக்கோள்
நம்முடைய பொது அரசியல் எதிரிகளின் பிரித்தாளும் முயற்சிக்கு நாம் இடம்கொடுத்துவிடக் கூடாது என்பது ஜெயலலிதாவின் எண்ணம். அதைக் காப்பது நமது கடமை.
இந்த மாபெரும் இயக்கம் சிலரின் சொந்த விருப்பு வெறுப்புகளால் சிதைந்துவிடக் கூடாது என்று உங்களுக்கு எல்லாம் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
என் வாழ்நாளில் கடைசி நிமிடம் வரை அதிமுக என்னும் இந்த மாபெரும் இயக்கம் வளர ஏழை மக்களின் மனதில் என்றும் குடிகொண்டிருக்கும் இந்த இயக்கம் வாழையடி வாழையாகத் தழைத்தோஙக என் இறுதி மூச்சு உள்ள வரை இந்த இயக்கத்துக்காக என்றும் உழைத்திருப்பேன்.
அம்மாவின் அன்புத் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வரும் தேர்தலில் வெற்றிக் கனியை ஜெயலலிதாவின் பொற் பாதங்களில் சமர்ப்பிக்க உறுதியேற்க வேண்டும். எத்தனை சோதனைகள் வந்தாலும், அதை ஜெயலலிதாவின் ஆசி கொண்டு வெற்றி பெற்றுவோம்.
எம்ஜிஆரின் பொன் மொழிகளுக்கு ஏற்ப அன்புக்கு நான் அடிமை, தமிழ்ப் பண்புக்கு நான் அடிமை- கொண்ட கொள்கைக்கு நான் அடிமை, தமிழக மக்களுக்கும் என் தொண்டர்களுக்கும் நான் அடிமை.. ஆனால் அடக்குமுறைகளுக்கு அஞ்ச மாட்டேன்" என சசிகலா தனது பேச்சில் தெரிவித்தார்.
அதிமுக கட்சியைக் கைப்பற்றுவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சசிகலா, “மிக விரைவில் செய்தியாளர்களையும்,மக்களையும் சந்திபேன். அப்போது சொல்கிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள் ” என்று தெரிவித்தார்.