சசிகலாவின் கணவர் நடராஜன், உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழப்பால் சென்னை குளோபல் மருத்துவமனையில் கடந்த மாதம் நடராஜன் அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் கிடைக்காமல் தள்ளிப்போகவே நடராஜனின் உடல் நிலை கவலைக்கிடமாக மாறியது. இடையில் அவரைப் பார்க்க சிறையில் இருந்து 5 நாட்கள் பரோலில் வந்து சென்றார் சசிகலா. இதைத் தொடர்ந்து, தஞ்சாவூரைச் சேர்ந்த, விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞர் ஒருவரின் கல்லீரல் கிடைக்க நடராஜனுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
இந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு நெஞ்சுவலி காரணமாக மீண்டும் குளோபல் மருத்துவமனையில் நடராஜன் அனுமதிக்கப்பட்டார். நேற்று, அவர் உயிரிழந்து விட்டார் என்று செய்திகள் பரவின. ஆனால், இதனை மருத்துவமனை நிர்வாகம் மறுத்தது. ஆனால், நடராஜன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இந்தச் சூழ்நிலையில், குளோபல் மருத்துவமனை நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடராஜ் கடந்த 16ம் தேதி கடுமையான நெஞ்சுவலி காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் உள்ளார். உடல்நிலை அபாய கட்டத்தில் உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது.