சசிகலாவின் ரூ.300 கோடி பினாமி சொத்துக்கள் : அதிரடியாக முடக்கிய வருமான வரித்துறை
Sasikala : சென்னை, போயஸ் தோட்டத்தில், வேதா நிலையத்திற்கு எதிரே உள்ள, 24 ஆயிரம் சதுர அடி நிலம், ஆலந்துார், தாம்பரம், ஸ்ரீபெரும்புதுார் உட்பட, பல்வேறு பகுதிகளில் உள்ள, 200 ஏக்கர் நிலங்களும் அடங்கும்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் பினாமி பெயர்களில் இருந்த, 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான, 65 சொத்துக்களை, பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ், வருமான வரித் துறை முடக்கி உள்ளது.
Advertisment
2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, பினாமி பெயரில் சேர்த்ததற்காக, 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சசிகலாவின் சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியது. இந்த நிலையில் தற்போது பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ், சசிகலாவின் 65 சொத்துகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மேலும், 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை, வருமான வரித் துறையினர் கையகப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக சசிகலாவிற்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியதாவது: சசிகலா மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களின் வீடுகளில், 2017ல் வருமான வரி சோதனை நடந்தது. அப்போது, அங்கு சில புகைப்படங்களும், ஆவணங்களும் சிக்கி உள்ளன.அந்த ஆவணங்கள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, சொத்துக்கள் முடக்கப்பட்டு வருகின்றன.
சமீபத்தில், ஐதராபாத்தில் உள்ள, 'அரிசந்தனா எஸ்டேட்' நிறுவனத்தின் பெயரில் இருந்த, 65 சொத்துக்கள், பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதில், சென்னை, போயஸ் தோட்டத்தில், வேதா நிலையத்திற்கு எதிரே உள்ள, 24 ஆயிரம் சதுர அடி நிலம், ஆலந்துார், தாம்பரம், ஸ்ரீபெரும்புதுார் உட்பட, பல்வேறு பகுதிகளில் உள்ள, 200 ஏக்கர் நிலங்களும் அடங்கும். இதன் மதிப்பு, 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும். இந்த சொத்துக்கள் பரிமாற்றம், 2003 - 2005ல் நடந்துள்ளது. சொத்துக்களை கையகப்படுத்தியது தொடர்பாக, பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil