Advertisment

விடுதலை ஆனதும் தஞ்சாவூர் பண்ணை வீட்டில் ஓய்வெடுக்க திட்டமா? சசிகலா விளக்கம்

சசிகலா விடுதலைக்குப் பிறகு, தஞ்சாவூரில் பண்ணை வீட்டில் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், தனது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு விளக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.

author-image
WebDesk
New Update
sasikala vk sasikala release date jail, sasikala political plan, சசிகலா அரசியல் திட்டம், sasikala letter to advocate raja senthoor pandian

சசிகலா

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் சசிகலா விடுதலைக்குப் பிறகு, தஞ்சாவூரில் பண்ணை வீட்டில் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், தனது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு விளக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சுதாகரன், இளவரசி ஆகியோரோடு கடந்த நான்கு ஆண்டுகளாக சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வர உள்ளதால், இப்போதே, ஆளும் அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் கூட்டணி வியூகத்தையும், முதல்வர் வேட்பாளர் யார் என்பதையும் அறிவித்து விரைவாக செயல்பட்டு வருகின்றன.

அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று முதல்வராகும் தருணத்தில், சொத்துக் குவிப்பில் சிறை சென்றார். சசிகலாவின் ஆதரவாளராக இருந்து முதல்வரான பழனிசாமி, சசிகலாவையும் டிடிவி தினகரனையும் அதிமுகவில் இருந்து நீக்கினார். ஓ.பி.எஸ். இ.பி.எஸ். அணிகள் இணைந்தது. இந்த 4 ஆண்டுகளில் பல அரசியல் நிகழ்வுகள் நடந்துவிட்டது.

சில மாதங்களுக்கு முன்பு, சசிகலா, சிறையில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி விடுதலை ஆவார் என்று தகவல் வெளியானது. இதையடுத்து, சகிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால், அதிமுகவில் பல அமைச்சர்கள் அவருக்கு ஆதரவாக செல்வார்கள் என்றும் அதிமுகவில் பெரிய மாற்றம் ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.

அதே நேரத்தில், சிறையில் இருக்கும் சசிகலாவின் உடல்நிலை, மோசமாக இருப்பதாகவும், அவருக்கு சர்க்கரை வியாதி இருப்பதாகவும் சிறுநீரக பாதிப்பு இருப்பதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது. சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால், அவர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஓய்வெடுக்க உள்ளதாகவும் பேசப்பட்டது. ஆனால், அவை எதுவும் அதிகாரப் பூர்வமாக உறுதி செய்யப்படாத செய்திகளாக இருந்தன. இப்படி சசிகாலவின் விடுதலைப் பற்றியும் உடல்நிலைப் பற்றியும் அவருடைய வருங்கால அரசியல் நடவடிகைகள் குறித்து பல்வேறு யூகங்கள் செய்திகளாக வெளியாகி வந்தன.

இந்த நிலையில், சசிகலாவுக்கு அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் அவருடய உடல் நிலை குறித்து பரவும் வதந்திகள் குறித்து கடிதம் மூலம் தெரியப் படுத்தியுள்ளார். ராஜா செந்தூர் பாண்டியன் கடிதத்துக்கு பதில் கடிதம் எழுதியுள்ள சசிகலா, தனது உடல்நிலை குறித்து பரவும் தவறான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்தும் தனது உடல்நிலை குறித்தும் தன்னை சந்தித்தவர்கள் குறித்தும் தெரிவித்து விளக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.

சசிகலா சிறைத் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் மூலமாக வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தங்களுடைய 6-10-2020 தேதியிட்ட கடிதம் கிடைக்கப்பெற்றேன். விவரங்களை அறிந்துகொண்டேன். நாங்கள் நலமாக இருக்கிறோம். நீங்கள் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

கோவிட் காரணமாக தமிழக மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக வரும் செய்திகள் எனக்கு வேதனையளிக்கிறது. கோவிட் நோய் தொற்றுப் பரவலினால் தமிழகத்தில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது என்பதும் எனக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. விரைவில் தமிழக மக்களும் பிற மாநில மக்களும் கோவிட் நோய் தொற்றிலிருந்து முற்றிலுமாக மீண்டு, சகஜ நிலை திரும்ப மனதார இறைவனை தினமும் வேண்டி வருகிறேன்.

கோவிட் காரணமாக 2020 மார்ச் மூன்றாம் வாரத்திலிருந்து , கைதிகள் நேர்காணல்ளை கர்நாடக சிறைத் துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. எப்போது நேர்காணல் அனுமதி அளிக்கப்படும் என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.

கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டபடி சிறைத்துறை எனது நன்னடத்தை ரெமிஷன் விஷயத்தில் விரைவில் சட்டப்படியாக முடிவெடுப்பார்கள் என்று நம்புகிறேன். உத்தரவு கிடைத்தவுடன் உங்களுக்கு தெரிவிக்கிறேன். அதன்படி ஃபைன் தொகையை முறைப்படி நீதிமன்றத்தில் செலுத்த ஏற்பாடு செய்யுங்கள்.

கர்நாடகா நீதிமன்றத்தில் ஃபைன் கட்டிய பிறகு உச்ச நீதிமன்றத்தில் 14.02.2017 தேதி தீர்ப்பு வழக்கு விஷயத்தில், சட்டப்படியாக குயூரிட்டி மனுவை தாக்கல் செய்ய இயலுமா என்பதனை மீண்டும் டெல்லி மூத்த வழக்கறிஞர்களிடம் உறுதி செய்யுங்கள். அதுபற்றி டிடிவி தினகரனிடம் ஆலோசித்து செயல்படுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

தனது உடல்நிலை குறித்து சசிகலா குறிப்பிடுகையில், “எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது. உள்நோக்கம் கொண்ட நபர்கள் பரப்பிய விஷம பொய்ச் செய்தியை உண்மை என நம்பி வெளியிடப்பட்டுள்ளது. நான் வணங்கும் இறைவன் ஆசியோடும். என் உடன் பிறவா அக்காவின் ஆசியோடும் அவரது கோடிக்கணக்கான தொண்டர்களின் வாழ்த்துகளாலும் நான் நல்ல உடல்நலத்துடன் உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

publive-image                                            சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்

அதோடு, சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு எழுதியுள்ள அந்த கடிதத்தில், ஜெய் ஆனந்த் என்னை வந்து சிறையில் சந்தித்ததாகவும், பேசியதாகவும், என் நிலையை பார்த்து அதிர்ந்து போனதாகவும், அத்தை நீங்கள் பத்திரமாக வெளியே வந்தாலே போதும், தஞ்சாவூரில் இயற்கை சூழ்ந்த பண்ணை வீட்டுல நீங்க இனி ஓய்வு எடுக்க வேண்டும். உங்களை எல்லோரும் ரொம்ப புண்படுத்தியதாகவும் இனி வரும் காலங்களில் நீங்கள் நிம்மதியா இருக்க வேண்டும் என என்னிடம் கூறியதாக ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தியில் ஒரு சதவீதம்கூட உண்மை இல்லை. ஜெய் ஆனந்த் என்னை வந்து சந்திக்கவே இல்லை” என்று சசிகலா மறுப்பு தெரிவித்துள்ளார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருக்கும் சசிகலா, அவருடைய வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு எழுதியுள்ள இந்த கடிதத்தின் மூலம், சசிகலா, சிறையில் நல்ல உடல் நிலையில் இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர் டிடிவி தினகரன் உடன் நல்ல உறவில்தான் உள்ளார் என்பது தெரிகிறது. மேலும், சசிகலா விடுதலைக்குப் பிறகு, தஞ்சாவூர் பண்ணை வீட்டில் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகள் எல்லாம் உண்மை இல்லை என்பதும் அவர் விடுதலைக்குப் பிறகு தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்பதும் இந்த கடிதம் மூலம் தெரிகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Sasikala Ttv Dinakaran Vk Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment