வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா, உடல்நலக் குறைவால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முன்னதாக, காய்ச்சல் மற்றும் முதுகுவலி காரணமாக சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மூச்சுத் திணறல் உடல் நலக் குறைபாடு ஏற்பட்டதால் பெங்களூரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர்.
சசிகலா ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் அறிகுறிகள் இருப்பதால் கோவிட்- 19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி 27-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆவார் என்று ஊர்ஜிதமான செய்திகள் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, சசிகலா உடல்நலப் பாதிப்பால் விடுதலையில் மாற்றமில்லை என அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார். இதுகுறித்து ஊடகத்திடம் பேசிய அவர், " சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது. அவரது, குடும்ப உறுப்பினர்களிடம் முறையாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. 27ம் தேதி விடுதலைக்கும், இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஏனெனில், சிறையில் உள்ள ஒரு நபருக்கு மருத்துவ சிகிச்சையளிப்பது சிறைத்துறையின் பொறுப்பு. சிறைத்துறையின் பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் தான் தற்போது சசிகலா இருக்கிறார். அந்த அடிப்படையில், மருத்துவமனை அனுமதி கூட சிறை வாசகத்துக்கு உட்பட்டதுதான். எனவே, 27ம் தேதி விடுதலையில் எந்த மாற்றமும் இல்லை" எனத் தெரிவித்தார். முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய அவர், 27-ம் தேதி காலையிலேயே சசிகலா விடுதலை செய்யப்பட்டுவிடுவார் எனத் தெரிவித்தார்.
செல்வி செயலலிதாவுடன் இணைந்து வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தண்டனையைப் பெற்றார். பிறகு மேல்முறையீடு செய்து விடுதலையானார். ஆனால் மீண்டும் 2017 ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் சசிகலா குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil