சொத்து குவிப்பு வழக்கில் அபராத தொகையான 10 கோடி ரூபாயை வரையோலையாக பெங்களூரு தனி நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் இன்று செலுத்தினார்கள். பழனிவேல், வசந்திதேவி, ஹேமா, விவேக் பெயரில் டிடி செலுத்தப்பட்டது.
இதனையடுத்து, சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவின் தண்டனை காலம் விரைவில் நிறைவடைய இருக்கிறது.
1991-96 பதவிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக செயலலிதா சுமார் 66.65 கோடி சொத்து சேர்த்தார் என்ற வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய அனைவரும் குற்றவாளிகள் என்று அறிவித்தது.
ஜெயலலிதாவிற்கு ரூ. 100 கோடியும், மற்ற மூவருக்கும் தலா ₹10 கோடியும் அபராதமாகவும், அனைவருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது
முன்னதாக, பெங்களூருவைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் நரசிம்மமூர்த்தி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் சசிகலாவின் விடுதலை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை, 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி சசிகலா விடுதலையாவார் என்றும், அவரது அபராதத் தொகையை செலுத்தாத பட்சத்தில் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி அவர் விடுதலை ஆகலாம் என்றும் தெரிவித்தது.
2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பெங்களூரில் இருக்கும் சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார். தனது அபராத தொகையை சசிகலா தற்போது செலுத்தியுள்ளதால், அவர் விரைவில் விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விடுதலைக்குப் பிறகு, தஞ்சாவூர் பண்ணை வீட்டில் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்றும், சிறை வாழ்க்கைக்குப் பிறகு தீவிர அரசியலில் ஈடுபட உள்ளேன் என்பதை சசிகலா தனது வழகறிஞர் ராஜா செந்தூர் பாண்டியணுக்கு எழுதிய கடிதத்தின் மூலம் உணர்த்தியிருந்தார்.