ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி வி.கே.சசிகலா, அதிமுக தொண்டர்களுடன் போனில் பேசிய ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், கொரோனா லாக் டவுன் முடிந்ததும் மாவட்டம் வாரியாக சசிகலா சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக மூத்த புலமைப்பித்தன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி வி.கே.சசிகலா, தான் ஆட்சிக்கு வந்தால் நல்லாட்சியை தருவதாகக் கூறியுள்ளார். 2017-ல் அதிமுகவில் டிடிவி தினகரனின் ஆதரவாளராக செயல்பட்ட 18 எம்எல்ஏக்களை தேவையின்றி தகுதி நீக்கம் செய்ததன் மூலம் அதிமுக தலைமை ஒரு பெரிய தவறு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாவட்டமான தேனியைச் சேர்ந்த அதிமுக தொண்டரிடம் பேசிய சசிகலா, அதிமுக தலைமை சுயநலமாக இருப்பதாக கடுமையாக விமர்சித்தார். சசிகலா போனில் பேசிய ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாக பரவியது.
சசிகலா அந்த ஆடியோவில், “எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது தேவையற்றது. அம்மா (ஜெயலலிதா) உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது கட்சி கடுமையாக உழைத்து அந்த இடங்களை வென்றது. அவர்கள் அந்த உண்மையை மறந்து தகுதி நீக்கம் செய்தது ஒரு பெரிய தவறு” என்று கூறியுள்ளார்.
மேலும், அதிமுக தலைமை முடிவெடுப்பதற்கு முன்னர் பொது காரணத்தையும் கட்சியின் நல்வாழ்வையும் கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டது என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதா செய்ததைப் போல கட்சியை வழிநடத்தி ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் கடைபிடிப்பேன். இப்போது, கட்சியில் ஒழுங்கு இல்லாததால்தான் கட்சி ஆட்சியை இழந்தது. ஒழுங்காக இருந்திருந்தால் அதிமுக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்திருக்கும் என்று சசிகலா கூறியுள்ளார்.
தற்போதைய அதிமுக தலைமை தொண்டர்களை மாற்றாந்தாய் போல நடத்தி வருவதாகவும், அவர் அதிமுகவின் 1.5 கோடி தொண்டர்களின் குடும்பத்தை பாதுகாப்பார் என்றும் சசிகலா கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மக்கள் நல திட்டங்களை ஏழை எளியவர்களுக்கு செயல்படுத்துவது தனது பொறுப்பு என்று அவர் கூறினார். பொது முடக்கம் நீக்கப்பட்ட பிறகு மாவட்டவாரியாக செல்ல சசிகலா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில்தான், கவிஞர் புலமைப்பித்தன், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, லாக்டவுன் முடிந்ததும் தொண்டர்களை சந்திக்க மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டபோது, அவர் அதிமுக கட்சி தொடங்கிய காலத்தில் எம்.ஜி.ஆரின் தீவிர ஆதரவாளராக கவிஞர் புலமைப்பித்தன் செயல்பட்டார். இப்போது, அவர் சசிகலாவின் அரசியல் சுற்றுப்பயணத்தையும் கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"