சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்து நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சிகிச்சை முடிந்து விரைவில் தமிழகம் திரும்ப உள்ள நிலையில், தமிழக அரசியலில் இப்போதே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. சசிகலா தமிழகம் வந்தவுடன் மீண்டும் அதிமுகவில் இணைவரா? அமமுகவில், இணைவரா? அல்லது உடல்நிலை காரணம் காட்டி அரசியலில் இருந்து விலகுவரா? என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆனால் 30 வருடங்களாக அதிமுகவில் இருந்த சசிகலாவுக்கு தற்போது அதிமுகவில் இடம் இல்லை என முதல்வர் பழனிச்சாமி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதனால் தமிழகம் வரும் சசிகலாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் சசிகலாவின் பற்றிய பேச்சு வாராமல் இருக்க அதிமுக சார்பில் பல வேலைகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக சசிகலா விடுதலை செய்யப்பட்ட அன்று (ஜன.27) அவரை பற்றிய செய்திகளை மக்கள் தவிர்க்க வேண்டும் என்பதற்காக அதிக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டது.
மேலும் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வேதா இல்லம் அரசுடைமையாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றி மக்கள் பார்வைக்காக தயார்படுத்தும் பணி முடிவடைந்து, நேற்று (ஜன.28) திறக்கப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் ஜெயலலிதாவின் நினைவிடம் மற்றும் நினைவு இல்லம் திறக்கப்பட்ட நிகழ்வு, தமிழகத்தில் சசிகலாவின் விடுதலை செய்தியை மறக்கடிக்க அதிமுக சார்பில் செய்த வேலையாகவே பார்க்கப்படுகிறது. அதிமுகவின் இந்த இந்த தீவிர நடவடிக்கையை கண்டுகொள்ளாத, நெல்லை மாநகர மாவட்டத்தின் இணை செயலாளர் எம்ஜிஆர் மன்றத்தை சேர்ந்த சுப்பிரமணியராஜா சசிகலா விடுதலையை வரவேற்று போஸ்டர் ஒட்டினார்.
இந்த விவகாரம் அதிமுக கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக சுப்பிரமணியராஜா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். அதிமுகவின் இந்த நடவடிக்கை தொண்டர்களிடையெ ஒருவித கலகத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு நிர்வாகி ஒருவர் சசிகலா விடுதலையை வரவேற்று போஸ்டர் ஒட்டியுள்ள விவகாரம் அதிமுகவினரிடையே மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தின், அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி ரா.அண்ணாதுரை திருச்சியின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்களை ஒட்டியிருந்தார். இதனால் அவர் கட்சியின் கொள்கை கோட்பாட்டை மீறியதாகவும், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதாகவும் கூறி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது அதிமுகவின் இந்த நடவடிக்கை தொண்டர்கள் பலரிடம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"