பாஜகவில் இணைந்த சசிகலா புஷ்பா; மாநில மகளிரணி செயலாளர் பதவிக்கு குறி

மாநிலங்களவை எம்.பி. சசிகலா புஷ்பா டெல்லியில் பாஜக தலைமை அலுவலத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

By: February 2, 2020, 5:38:02 PM

மாநிலங்களவை எம்.பி. சசிகலா புஷ்பா டெல்லியில் பாஜக தலைமை அலுவலத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

தமிழக பாஜக தலைவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் செய்தியாளர்கள் சந்திப்பிலும் சூலுரைத்து வருகிறார்கள். அதற்காக, எல்லா ஊர்களிலும் பாஜக கிளைகளை தொடங்குவது; பிரபலங்களை பாஜகவில் சேர்ப்பது என்று அதற்கான முயற்சிகளை செய்து வருகின்றனர். அதே போல, தேசிய அளவிலும் பிரபலங்களை பாஜகவில் இணைக்கும் நிகழ்வுகள் நடந்துவருகின்றன.

தமிழகத்தில் தாமரையை மலரச் செய்வதற்காக பாஜக ஆபரேஷன் தாமரை என்ற திட்டத்தை செயல்படுத்திவருவதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

பொதுமக்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக தங்கள் கட்சி மீது நல்ல அபிப்ராயம் கொண்ட பிரபலங்களை பாஜக தலைவர்கள் கட்சியில் சேர்த்து வருகின்றனர்.

தமிழ் மாநில பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநரான பிறகு, அந்த பதவி இன்னும் அப்படியே காலியாகத்தான் இருக்கிறது. கடந்த டிசம்பர் மாதமே பாஜகவின் தேசிய தலைமை பாஜவின் தமிழக தலைவர் யார் என்பதை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறிவிக்கப்படவில்லை. தமிழக பாஜக தலைவர் பதவிக்கு வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரில் யாரவது ஒருவர் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக சினிமா பிரபலங்கள் பலரும் பாஜகவில் இணைந்து வருகின்றனர். நடிகர் விஜய் நடித்த சிவகாசி, திருப்பாச்சி படங்களை இயக்கிய இயக்குனர் பேரரசு அண்மையில் பாஜகவில் இணைந்தார். பேரரசுக்கு முன்பு, நடிகர் ராதாரவி, நடிகை நமீதா ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.

அதே போல, உலகின் நம்பர் ஒன் பேட்மிண்டன் வீராங்கனையாக திகழ்ந்த சாய்னா நெஹ்வால் அண்மையில் டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

இந்த நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்ட சசிகலா புஷ்பா சில சர்ச்சைகளில் சிக்கினார். மாநிலங்களவை எம்.பியாக செயல்பட்டுவரும் சசிகலா புஷ்பாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், சமீப காலமாக அவர் பாஜகவுக்கு ஆதரவாக பேசி வந்தார். தமிழகத்தில் மோடியின் ஆட்சி அமைந்தால்தான் நல்லாட்சி பிறக்கும் என்று தீவிர பாஜக ஆதரவை தெரிவித்துவந்தார். அதே நேரத்தில், திமுகவை கடுமையாக விமர்சித்தும் வந்தார்.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவகத்தில் சசிகலா புஷ்பா எம்.பி. பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் இணைந்த சசிகலா புஷ்பாவுக்கு முரளிதர ராவ் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பொன்.ராதாகிருஷ்ணன் சசிகலா புஷ்பாவுக்கு பாஜக சால்வை அணிவித்தார்.

பின்னர், சசிகலா புஷ்பா பேசுகையில், “பாஜக அரசு தமிழத்தில் மலர்வதை யாராலும் தடுக்க முடியாது” என்று கூறினார்.

தமிழகத்தில் இதற்கு முன்பு, அதிமுகவில் இருந்த நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து, சசிகலா புஷ்பா அதிமுகவில் இருந்து பாஜகவில் இணைந்திருப்பது அதிமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரத்தில், சர்ச்சைகள் காரணமாக அதிமுகவில் சசிகலா புஷ்பாவுக்கு முக்கியத்துவம் தரப்படாத நிலையில், தமிழகத்தில் தமிழிசையின் இடம் காலியாக உள்ளது. அந்த இடத்தை நிரப்ப முடியும் என்று கருதும் சசிகலா புஷ்பா பாஜகவின் மாநில மகளிரணி செயலாளர் பதவியைக் குறிவைத்து செயல்பட்டுவருவதாக பாஜக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Sasikala pushpa joined in bjp

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X