தமிழகத்தைச் சேர்ந்த பாஜக ராஜ்ய சபா எம்.பி சசிகலா புஷ்பா ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் திருப்பதிக்கு செல்லும்போது அலிப்பிரி சுங்கச்சாவடியில் இருந்த விஜிலென்ஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடமும் குடுப்பதினரிடமும் தவறாக நடந்துகொண்டதாக புகார் அளித்துள்ளார்.
ராஜ்ய சபா எம்.பி சசிகலா புஷ்பா அண்மையில் பாஜகவில் இணைந்தார். சர்ச்சைகளுக்கு சொந்தக்காரரான சசிகலா புஷ்பா தமிழக மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களின் டிஜிபி-க்களிடம், ஞாயிற்றுக்கிழமை விஜிலென்ஸ் மற்றும் பாதுகாபு ஊழியர்கள் அரசு விதிமுறைகளை மீறி தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
சசிகலா புஷ்பா எம்.பி அவருடைய கணவர், மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஊழியர்கள் உள்பட திருப்பதிக்கு செல்வதற்காக அலிப்பிரி சுங்கச்சாவடிக்கு சனிக்கிழமை இரவு 11.45 மணிக்கு சென்றுள்ளார். சசிகலா புஷ்பா காருக்கு பாதுகாப்பாக புத்தூரிலிருந்து உள்ளூர் போலீசார் 3 வாகனங்களில் வந்துள்ளனர். அவர்களுடைய வாகனங்கள் அலிப்பிரி சுங்கச்சாவடியைக் கடக்கும்போது அலிப்பிரி விஜிலென்ஸ் அதிகாரிகளால் நிறுத்தியதோடு, மேலும், வாகனங்களை செல்ல அனுமதிக்காமல் வாகனங்களை சோதனை செய்தனர். பின்னர், அவர்களுடைய உடமைகளை ஸ்கேனர் வழியாக பரிசோதனை செய்து செல்லும்படி செய்தனர். ஆனால், சசிகலா புஷ்பா தான் எம்.பி என்று கூறி அரசு விதிமுறைகளின் படி தன்னுடைய வாகனம் நிறுத்தப்படாமல் செல்ல அனுமதி உள்ளது என்று விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இதனால், அவருக்கும் விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, சோதனைக்குப் பிறகு, அவர்களுடைய வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
அங்கிருந்து கார்கள் நகரத் தொடங்கிய பின்னர், விஜிலென்ஸ் அதிகரிகள் மீண்டும் கடைசியில் வந்த வாகனத்தின் பின்புற ஜன்னல் கண்ணாடிகளை தட்டி வாகனங்களை நிறுத்தி வாகனங்களில் உள்ள எம்.பி. ஸ்டிக்கர்களை அகற்றுமாறு கூறியுள்ளனர்.
இதற்கு, சசிகலா புஷ்பா எம்.பி-யும் அவரது கணவரும் இது கட்சி ஸ்டிக்கர் இல்லை. அதிகாரப்பூர்வமானது என்று விளக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், மீண்டும் விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கும் எம்.பி.-க்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்போது, விஜிலென்ஸ் அதிகாரிகள் சசிகலா புஷ்பாவின் கணவருக்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்ததாகவும் அதை அவர் தனது செல்போனில் பதிவு செய்ய முயன்றபோது விஜிலென்ஸ் அதிகாரிகள் அவருடைய செல்போனை பறித்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது சசிகலா புஷ்பா எம்.பி தனது கணவரின் போனை எடுக்க முயன்றபோது அதைக்கொடுக்காததால் ஏற்பட்ட கைகலப்பில் சசிகலா புஷ்பா கைகளில் கீறல்கள் ஏற்பட்டன.
ஒருவழியாக அங்கிருந்து எம்.பி.-யின் வாகனங்கள் புறப்பட்டு 2 கி.மீ சென்றதும் இன்னொரு போலீஸ் குழுவினர் வந்து அவர்களுடைய வாகனங்களை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர், வாகனங்களை செல்ல அனுமதித்துள்ளனர்.
இது குறித்து சசிகலா புஷ்பா எம்.பி ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழக டிஜிபி-க்களிடம் புகார் அளித்தார். இதனிடையே, திருமலை போலீஸ் அதிகாரிகள் காலையில் சசிகலா புஷ்பா எம்.பி-யை சந்திக்க முயற்சி செய்தனர். ஆனால், அவர் போலீசாரை பார்க்க மறுத்துவிட்டார்.
மேலும், திருமலை திருப்பதி தேவஸ்தான விஜிஓ மனோஹர் இது ஒரு சிறிய சம்பவம் என்று கூறி மறுத்துள்ளார்.
பாஜக எம்.பி. சசிகலா புஷ்பா அரசு விதிமுறைகளை மீறி தனது வாகனங்களை தடுத்து நிறுத்தி விஜிலென்ஸ் ஊழியர்கள் தன்னிடமும் தனது குடும்பத்தினரிடமும் தவறாக நடந்துகொண்டார்கள் என்று இரு மாநில டிஜிபி-க்களிடம் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"