scorecardresearch

எம்ஜிஆருடன் பயணித்தவள் நான்; அவரே என்னிடம் கருத்து கேட்பது உண்டு: சசிகலா

அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆருக்கே தான் ஆலோசனை கூறியுள்ளதாக சசிகலா பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது.

சசிகலா அரசியலுக்கு திரும்ப வேண்டும் என அதிமுக தொண்டர்கள் வலியுறுத்த தொடங்கியதிலிருந்து, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அதிமுக தலைவர்கள் பலரும், அவர் கட்சியின் உறுப்பினர் அல்ல என கூறி சசிகலாவின் நகர்வுகளை குறைக்க முயன்று வருகின்றனர். சசிகலா தனக்கென தனிக்கட்சி தொடங்கட்டும் அதிமுக போர்வையில் வலம் வர முடியாது என்றனர்.

இதுவரை, அதிமுக பிரமுகர்களுடன் சசிகலா பேசும் 100க்கும் மேற்பட்ட ஆடியோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. மேலும் அவர் பழனிசாமியின் பெயரை எங்கும் குறிப்பிடவில்லை. தனக்கு கட்சியுடன் எந்த தொடர்பும் இல்லை என்ற குற்றச்சாட்டை மறுக்கும் முயற்சியில், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு நெருக்கமானவர்களிடம் உரையாடி வருகிறார்.

வியாழக்கிழமை, சசிகலா, அதிமுக நிறுவனர் எம்.ஜி.ராமச்சந்திரனுடனான தனது நெருங்கிய தொடர்பு பற்றி பேசியுள்ளார். மேலும் எம்.ஜி.ஆர் இறந்த பின்னர் ஜெயலலிதா மற்றும் ஜானகி அம்மாள் என இரண்டு பிரிவுகளாக அதிமுக பிரிந்த பின், அதனை இணைப்பதில் தனது பங்கு குறித்தும் விவரித்துள்ளார். எம்.ஜி.ஆரின் குடும்ப உறுப்பினர்கள் தன்னை அழைத்து, கட்சியைப் பாதுகாக்க அரசியலுக்கு திரும்ப வேண்டும் என்று தங்கள் விருப்பத்தை தெரிவித்ததாக சசிகலா கூறியுள்ளார்.

வியாழக்கிழமை சசிகலா பேசிய ஆறு அதிமுக பிரமுகர்களில் தூத்துக்குடி ராமசாமியும் ஒருவர். உரையாடலின் போது, ​​சசிகலாவுக்கு துரோகம் இழைத்தவர்களுக்கு எதிராக எந்தவிதமான கடுமையான வார்த்தைகளையும் அவர் கூறவில்லை என ராமசாமி கூறினார். அதற்கு பதிலளித்த சசிகலா, “தலைவர் (எம்.ஜி.ராமச்சந்திரன்) அந்த அமைதியைத் தக்க வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தார். நான் தலைவருடன் பயணம் செய்தேன் என்பது பலருக்குத் தெரியாது. தலைவர் என்னுடன் உரையாடியபோது, ​​அவர் கட்சி விவகாரங்கள் பற்றி எனது கருத்துக்களைக் கேட்பது வழக்கம். நான் அவருக்கு மிகவும் பொறுமையாக பதிலளித்தேன். எனவே, இது எனக்கு ஒரு பழக்கமாக மாறியது என கூறினார்.

அதேபோல் ஜெயலலிதாவுடனான தனது நெருக்கத்தை உறுதிப்படுத்திக் கொண்டார், “அம்மா (ஜெயலலிதா) கோபமான மனநிலையில் முடிவுகளை எடுக்கும்போதெல்லாம், அவரின் அரசியல் நன்மைக்காக அமைதியாக முடிவு செய்ய வேண்டும் என ஜெவுக்கு அறிவுரை கூறினேன். அந்த மாதிரியான அணுகுமுறை நன்றாக வேலை செய்தது” என்றார்.

காட்டிக்கொடுப்பவர்களுக்கு எதிர்காலம் இருக்காது என்று ராமசாமி கூறியபோது, பதில் அளித்த ​​சசிகலா, “அதிமுக என்பது தொண்டர்களுக்கான கட்சி, அவர்கள் அதை மீண்டும் நிரூபிப்பார்கள். தலைவரின் மறைவுக்குப் பிறகு கட்சி இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டபோது, ​​நாங்கள் ஒன்றிணைவதில் முக்கிய பங்கு வகித்தோம் . அந்த இளம் வயதிலேயே எனக்கு இதுபோன்ற முதிர்ச்சி இருந்தது. இப்போது, ​​இதேபோன்ற நிலைமை அதிமுகவுக்கு நிலவுகிறது. ஆகவே, கட்சியிலிருந்து விலகி இருப்பவர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று இப்போது நான் விரும்புகிறேன். நான் அதைச் செய்வேன். அதை நிறைவேற்ற கடமை இருக்கிறது. ” என்றார்.

திருப்பூரைச் சேர்ந்த ரெய்னா பானு, சசிகலா அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்று கூறியபோது, ​ நாங்கள் கட்சியை கைப்பற்ற தேவையில்லை, ஏனெனில் அது எங்கள் கட்சி என பேசினார்.

இதற்கிடையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி ஆலோசனை நடத்தினார். மூன்று மணி நேரம் ஆலோசனை நடைபெற்றது. வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் கட்சி பிரமுகர்களுடன் சசிகலா தொடர்ந்து பேசும் ஆடியோக்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. இதனிடையே மதுரையில் பல இடங்களில் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Sasikala recalls her association with admk founder mgr