அண்ணா திமுக கட்சியின் முதல் எம்பி மாயத்தேவர் செவ்வாய்க்கிழமை (ஆக.9) காலமானார். திண்டுக்கல்லில் அவரது உடலுக்கு இன்று (புதன்கிழமை) சசிகலா மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித் அவர், “இரட்டை இலை சின்னத்தில் முதன்முறையாக போட்டியிட்டு வென்றவர் மாயத் தேவர். அபபோது இரட்டை இலை சின்னத்தில் சுயேச்சையாக அவர் வெற்றி பெற்றார்.
நான் கடந்த வாரம் அவரை சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் முடியாமல் போய்விட்டது. மாயத்தேவரின் மறைவுக்கு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தேன்” என்றார்.
தொடர்ந்து அதிமுகவில் மீண்டும் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை சேர்க்க மாட்டோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறாரே என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சசிகலா, ‘அதிமுக மக்களுக்கான இயக்கம். அந்த இயக்கத்தை ஒன்றிணைத்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். மேலும் கட்சி என்பது மக்களுக்காக தொடங்கப்பட்டது.
இதையடுத்து அதிமுகவின் பிரிவுக்கு யார் காரணம் என்று செய்தியாளர்கள் வினாயெழுப்பினர். அதற்கு, “நான் 40 ஆண்டுகாலம் அரசியலில் இருக்கிறேன். பல்வேறு கடினமாக சூழ்நிலைகளையும் பார்த்துள்ளேன். ஆகவே அதிமுக உள்கட்சி பிரச்சினைக்கு திமுகதான் காரணமாக இருக்க முடியும் என நம்புகிறேன்” என்றார்.
அதிமுக முதல் மக்களை உறுப்பினர் மாயத் தேவர் உடலுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இணை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே ஒற்றை தலைமை விவகாரத்தில் பூசல் ஏற்பட்டது.
இந்தப் பிணக்கு காரணமாக இருவரும் ஒருவரையொருவர் கட்சியை விட்டு நீக்கியுள்ளனர். எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் உள்கட்சி பிரச்சினை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“