ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, சென்னை அசோக்நகரில் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்துப் பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “நான் இ.பி.எஸ் பக்கமோ, ஓ.பி.எஸ் பக்கமோ இல்லை. நான் யார் பக்கமும் இல்லை” என்று கூறினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, சென்னை அசோக் நகரில் அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்துப் பேசினார். பின்னர் சசிகலா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, “மூத்த அண்ணன் அதனால் பார்த்துவிட்டு போகலாம் என வந்தேன். மற்றபடி அரசியல் விஷயமா எல்லாமே கலந்து பேசியிருக்கிறோம்” என்று கூறினார்.
இதையடுத்து செய்தியாளர்கள் சசிகலாவிடம் அதிமுகவில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் மோதல் தொடர்பாகவும் அதில் சசிகலாவின் நிலைப்பாடுகள் குறித்தும் கேள்விகளை எழுப்பினார்கள். அதற்கு சசிகலா பதிலளித்தார்.
கேள்வி: ‘நீங்களும் ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று நூற்றுக்கும் மேற்பட்ட தேவர் அமைப்புகள் கடிதம் எழுதியுள்ளதாக ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. அது தொடர்பாக உங்களுடைய கருத்து என்ன? இதில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?
சசிகலா: என்னைப் பொறுத்தவரைக்கும் அதிமுகவில் உள்ள அத்தனை பேரும் எனக்கு வேண்டியவர்கள்தான். அதனால், எல்லோரும் சேர்ந்து ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும் என்பதுதான் என்னுடையா ஆசை.
கேள்வி: சாதி ரீதியாக ஒரு பக்கம் கவுண்டர்களும் ஒரு பக்கம் தேவர்களும் என அதிமுகவில் பிளவு ஏற்பட்டிருக்கிறது என்ற கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
சசிகலா: எம்.ஜி.ஆர் இந்த கட்சியை ஆரம்பிக்கும்போது, சாதியும் பார்த்ததில்லை. மதமும் பார்த்ததில்லை. அந்த அடிப்படைக் கொள்கை இந்த நிமிடம் வரை எங்கள் மனதில் இருக்கிறது. எனவே, அதிமுக என்பது மதமாக இருந்தாலும் சரி, சாதியாக இருந்தாலும் சரி எல்லோரையும் ஒன்றாக நினைக்கிற ஒரு இயக்கம். அதன் அடிப்படையில்தான், என்னுடைய ஒவ்வொரு நகர்வும் இருக்கும். எல்லோரையும் ஒன்றிணைத்து செல்லக்கூடியதுதான் அதிமுகவின் பண்பாடு. எங்கள் தலைவர் (எம்.ஜி.ஆர்) அந்த வழியைத்தான் காண்பித்திருக்கிறார். அந்த வழியில்தான் நான் எடுத்துச் செல்வேன்.
கேள்வி: ஆனால், இது எதற்குமே இடம் கொடுக்காத வகையில், ஓ.பன்னீர்செல்வம் முதற்கொண்டு மாவட்ட செயலாளர்களை நீக்குகிறார்கள். மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமாரை நீக்குகிறார்கள். அவர்கள், அவர்களுடைய பாதையில் தீவிரமாகப் போய்க்கொண்டிருப்பது போலத் தெரிகிறதே?
சசிகலா: கட்சி என்று சொல்லும்போது அது ஒரு நிறுவனம் அல்ல. அதிமுகவைப் பொறுத்தவரைக்கும் எல்லோருக்குமான ஒரு இயக்கம். அதில் உள்ள அத்தனைபேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால்தான் 50 ஆண்டு காலமாக இந்த கட்சி வந்திருக்கிறது. அதை நிலைநிறுத்துவதுதான் என்னுடைய கடமையும்கூட. எங்கள் இரண்டு தலைவர்களுக்கும் (எம்.ஜி.ஆர், ஜெயலலிதா) நான் அதைத் தான் செய்ய வேண்டும். அதை நான் நிச்சயம் செய்வேன். இந்த பிரச்னை எல்லாம் காலப் போக்கில் சரியாகிவிடும் என்பது என்னுடைய திடமான நம்பிக்கை.
கேள்வி: உங்களால் கொண்டுவரப்பட்டவர்கள், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டவர்கள் எல்லோரும் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருக்கிறார்கள். நீதிமன்றத்திற்கு போனாலும் பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கணக்குப்படிதான் தீர்ப்புகளே வருகிறது?
சசிகலா: ஒரு இயக்கம் என்று சொல்லும்போது, சில நேரத்தில், தலைவரின் மறைவுக்கு பிறகுகூட, இது மாதிரி நடந்திருக்கிறது. ஆனால், பின்பு ஒரு கால கட்டத்தில் ஒன்றாக எல்லோரும் இணைந்தார்கள். அதே போல, இப்போதும் நிகழும். நிச்சயம் அது நடக்கும்.
கேள்வி: அதிமுக தேர்தல் சமயத்தில் இணையும் என்று சொல்லியிருக்கிறீர்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்குள் இணைய வாய்ப்பு இருக்கிறது?
சசிகலா: நிச்சயமாக இணைய வாய்ப்பு இருக்கிறது.
கேள்வி: அதிமுகவில் ஓ.பி.எஸ் ஒரு பக்கமும் இ.பி.எஸ் ஒரு பக்கமும் என இரண்டு பக்கமாக இருக்கிறார்கள். உங்களுடைய நிலைப்பாடு என்ன? நீங்கள் யாருடைய பக்கம் ?
சசிகலா: என்னைப் பொறுத்தவரைக்கும் நான் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன். எந்தப் பக்கமும் நான் இல்லை. நான் எங்கள் தொண்டர்கள், தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்களோ, அதுதான் என்னுடைய செயல்பாடாக இருக்கும்.
கேள்வி: நீங்கள் தொடர்ந்து புரட்சிப் பயணங்களை மேற்கொண்டுவருகிறீர்கள். பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் போகிறீர்கள். தொண்டர்களுடைய வரவேற்பு, மக்களுடைய வரவேற்பு எப்படி இருக்கிறது?
சசிகலா: நல்லா இருக்கிறது. ரொம்ப நல்லா இருக்கிறது. குறிப்பாக பொதுமக்கள் எங்களை ரொம்ப எதிர்பார்க்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரைக்கும் திமுக அரசாங்கத்தில், அவர்கள் தேர்தல் அறிக்கையில், அவர்கள் சொன்னதைக்கூட செய்யவில்லை. அப்படி என்பது போல சொல்கிறார்கள். அதே சமயம் திமுக அரசாங்கம். ஏழை எளியவர்களுக்காக ஜெயலலிதா பல திட்டங்களைக் கொண்டுவந்தார்கள். அதெல்லாம் இப்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. நான் போகும் இடத்தில் எல்லாம் மக்கள் என்னிடத்தில் சொல்கிறார்கள். நாங்கள் திரும்ப வந்து எடுத்து செய்ய வேண்டும் என்பதையும் எடுத்துச் சொல்கிறார்கள். நிச்சயம் நான் செய்வேன் என்பதையும் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்.
கேள்வி: உங்கள் தலைமையில் அதிமுக மீண்டும் ஒன்றிணைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?
சசிகலா: நிச்சயமாக வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால், தொண்டர்களுடைய எண்ணம் எதுவோ அதுதான் நடக்கும். என்று சசிகலா கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.