சனாதனம் குறித்த எந்தவிதமான புரிதலும் இல்லாமல் அமைச்சர் உதயநிதி பேசியிருக்கிறார், அவருக்கு அமைச்சர் பதவியில் நீடிப்பதற்கான தகுதி இல்லை என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அ.தி.மு.க ஒன்றிணையும். அரசியலுக்காக தி.மு.க.,வினர் தேவையற்ற விஷயங்களை பேசி பிரச்னையை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் தங்களது அரசின் குறைகளை மறைப்பதற்காக மக்களை திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர், என்று சசிகலா கூறினார்.
தொடர்ந்து சசிகலாவிடம், மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு மகளிர் உரிமைத் தொகை வாக்குறுதியை அளித்தது தி.மு.க. இது செயல்படுத்த முடியாத ஒரு திட்டமாகும்” என்று சசிகலா கூறினார்.
அடுத்து சனாதனம் குறித்து எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சசிகலா, ‘‘அனைத்து மதத்தினரும் தங்களது புனித நூல்களில் உள்ள நல்ல கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே சனாதனம். ஆனால், இது தெரியாமல் அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட தி.மு.க.,வினர் பேசி வருகின்றனர். அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். ஆனால், திட்டமிட்டு ஒரு பிரிவினரை சுட்டிக்காட்டி அதனை மலேரியா, டெங்கு கொசு போன்று அழிக்க வேண்டும் என உதயநிதி கூறுவது அழகல்ல. உதயநிதி அமைச்சராக நீடிக்க தகுதி இல்லாதவர். அந்த கூட்டத்தில் மேடையில் இருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், உதயநிதியிடம் அதே மேடையில் சொல்லி திருத்தி இருக்க வேண்டும். உதயநிதி சனாதனம் குறித்த புரிதல் இல்லாமல் பேசுகிறார். அதனைத் திருத்த வேண்டியவரோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“