கட்சியை சரி செய்ய நிச்சயம் வருகிறேன்; சசிகலா ஷாக் ஆடியோ!

சமூக வலைதளங்களில் சசிகலா லாரன்ஸ் எனும் தொண்டரிடம் பேசியதாக வைரலாகி வரும் ஆடியோவில், தொண்டர் ஒருவர் சின்னம்மா எப்படி இருக்கீங்க என நலம் விசாரிக்கிறார்.

Sasikala Hints At Return To Politics In Voice Call To Party Cadre : ஜெயலலிதா மறைவுக்கு பின், சொத்துக்குவிப்பு வழக்கில் 2017 ஆண்டு பிப்ரவரியில் சிறை தண்டனை பெற்று கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தமிழக சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் சிறை தண்டனை முடிந்து தமிழகம் திரும்பினார். அதிமுக வை கைப்பற்றுவார் என்றும், நடக்க போகும் தேர்தலில் சசிகலா தான் வெற்றியை தீர்மானிப்பார் எனவும் பரபரப்பு விவாதங்கள் அரசியல் வட்டாரங்களில் சூடுபிடித்தன. சசிகலாவின் வருகையும் அதையே தான் சுட்டிக் காட்டியது. 23 மணி நேர பயணத்திற்கு பிறகு, பெங்களூருவிலிருந்து சென்னையை வந்தடைந்தார். வழி நெடுகிலும் கூட்டம் கூட்டமாக அதிமுக தொண்டர்களும், அமமுக தொண்டர்களும் சசிகலாவுக்கு ஆரவார வரவேற்பு அளிக்க, சசிகலாவும் தனக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக எண்ணி தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட ஆரம்ப புள்ளி வைத்தார்.

அதிமுக மற்றும் அமமுக இணைப்பு பற்றி சசிகலா தீவிரமாக விவாதித்து வந்த நிலையில் அதிமுக வில் மீண்டும் இணைவது குறித்தும் சசிகலா கவனம் செலுத்தி வந்தார். எடப்பாடி பழனிச்சாமியின் விடாப்பிடியால், அதிமுக சசிகலாவை சேர்த்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில், திடீரென எவ்வித அரசியல் பணிகளும் ஈடுபடபோவதில்லை எனவும், தீவிர அரசியலில் இருந்து விலகி இருப்பதாகவும் சசிகலா அறிவித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். தேர்தலுக்கு பிறகாக, சசிகலா தனது நிலையை மாற்றிக் கொள்ளக் கூடும் என அரசியல் விமர்சகர்களும், அதிமுக மற்றும் அமமுக தொண்டர்களும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், அதிமுக தொண்டர் ஒருவரிடம் சசிகலா பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் சசிகலா லாரன்ஸ் எனும் தொண்டரிடம் பேசியதாக வைரலாகி வரும் ஆடியோவில், தொண்டர் ஒருவர் சின்னம்மா எப்படி இருக்கீங்க என நலம் விசாரிக்கிறார். அதற்கு, சசிகலா நலமுடன் இருப்பதாகவும் கொரோனா காலம் என்பதால், பாதுகாப்புடன் இருக்கும் படியும் அறிவுறுத்துகிறார். தொடர்ந்து பேசிய சசிகலா, நான் சீக்கரம் வந்துடுறேன். கட்சி எல்லாம் சரி பண்ணிக்கலாம். தைரியமாக இருங்க எல்லாரும். நிச்சயம் நான் வந்து விடுவேன்’ என அவரிடம் பேசி உள்ளார். இந்த ஆடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக, அதிமுக வட்டாரம் தேர்தலுக்கு பிறகாக மீண்டும் சூடு பிடித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sasikala speak with admk cadre viral audio return back to politics

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com