அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவருடைய நெருங்கிய தோழி சசிகலா 2017ம் ஆண்டில் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற முயன்றபோது, ஓ.பன்னீர்செல்வத்தின் தர்ம யுத்தத்தாலும் சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தண்டனையாலும் அவருடைய முயற்சி முறிந்தது. 4 ஆண்டு சிறை தண்டனை முடித்து தமிழ சட்டமன்றத் தேர்தலின்போது விடுதலையாகி வந்த சசிகலா தேர்தலில் போட்டியிட முடியாது என்றாலும் அவருடைய அக்கா மகன் டிடிவி தினகரன் பொதுச் செயலாளராக உள்ள அமமுகவுக்கு அதிமுகவுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் பெரிய நெருக்கடி கொடுத்து கட்சியை மீட்பார் என்று அவருடைய ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் அதிமுகவுக்கு எதிராக செயல்படமாட்டேன் தற்காலிகமாக் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக தெரிவித்தார். அவருடைய ஆதரவு இல்லாமல் டிடிவி தினகரனின் அமமுக தேர்தலில் படுதோல்வியடைந்தது.
சசிகலா இனி அரசியலுக்கு வரமாட்டார், அவருடைய அரசியல் அத்தியாயம் முடிந்துவிட்டது என்று அவருடைய ஆதரவாளர்களும் அவருடைய அரசியல் எதிரிகளும் முடிவுக்கு வந்த நிலையில், அதிமுக நிர்வாகிகளுடனும் அமமுக நிர்வாகிகளுடன் போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். சசிகலா கட்சி நிர்வாகிகளிடம் போனில் பேசிய ஆடியோ சமூக ஊடகங்களில் பரவி, அவர் அரசியலில் 2வது அத்தியாயத்தை தொடங்குகிறார் என்பதை அறிவித்திருக்கிறார் என்கிறார்கள்.
விடுதலைக்குப் பிறகு, அரசியலில் இருந்து ஓய்வு எடுத்துவரும் சசிகலா, அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவருடன் போனில் பேசியுள்ளார். சசிகலா போனில் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
அந்த ஆடியோவில் சசிகலா பேசியிருப்பதாவது: “மீண்டும் நான் கட்சிக்கு வருவேன் கண்டிப்பா கட்சியை சரி பண்ணிடலாம். தைரியமா இருங்க கரோனா முடிஞ்சதும் நான் வந்துடுவேன். குடும்பத்தோட ஜாக்கிரதையாக இருங்க நிச்சயம் வந்துடுவேன்” என்று கூறியுள்ளார்.
சசிகலா தன்னிடம் பேசியது குறித்து ஊடகங்களிடம் பேசிய வினோத், தான் அதிமுக ஐடி விங்கில் இருந்தாலும் கட்சி நிலவரம் பற்றி அடிக்கடி சசிகலாவுக்கு கடிதம் எழுதி வந்ததாக தெரிவித்துள்ளார். அதோடு அவர் எழுதும் கடிதத்துக்கு சசிகலாவிடம் இருந்து பதிலும் வரும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில்தான், திடீரென ஒரு ஃபோன் வந்தது என்றும் அதில் சின்னம்மா பேச பேசுகிறார் என்று சொன்னதும் நம்ப முடியாமல் வியந்துள்ளார் வினோத். சசிகலா பேசியதால் மகிழ்ச்சி அடைந்த வினோத், அவரிடம் மீண்டும் கட்சிக்கு வந்து வழிநடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு சசிகலா அவரிடம் கொரோனா முடிந்ததும் வருவதாக கூறியதாகவும் தெரிவித்துள்ளார். சசிகலாவின் ஒற்றைத் தலைமையின் கீழ் கட்சி வரவேண்டும் என்பதே தன்னைப் போன்ற அதிமுக தொண்டர்களின் விருப்பம் என்று வினோத் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல், சசிகலா சிறையில் இருந்து விடுதலையானபோதே தான் போஸ்டர் ஒட்டியதாகவும் அப்போதும் நடவடிக்கை எடுக்கவில்லை இப்போதும் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதே போல, சசிகலா அமமுக நிர்வாகி ஒருவரிடமும் போனில் பேசியுள்ளார். இவருடன் போனில் பேசிய ஆடியோவும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. சசிகலா அமமுக தொண்டரிடம் போனில் பேசியிருப்பது அக்கட்சியினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா போனில் பேசியவர், நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூா் ஒன்றிய அமமுக செயலா் என்.கோபால் என்பது தெரியவந்துள்ளது. சசிகலாவை நேரில் சந்தித்துப் பேச கடிதம் மூலம் நேரம் கேட்டிருந்த கோபாலிடம் மே 26ம் தேதி போனில் தொடா்புகொண்டு பேசியுள்ளாா்.
கோபாலிடம் நலம் விசாரித்த சசிகலா அவரிடம் கொரோனா காலகட்டம் என்பதால் கடிதம் மூலம் தொடா்பு கொள்ள முடியவில்லை, நேரிலும் அழைத்துப் பேச முடியவில்லை. அதனால் போனில் பேசுவதாக தெரிவித்துள்ளார். மேலு, தைரியமாக இருங்கள் தான் விரைவில் சந்திப்பதாகவும் மகிழ்ச்சியாக இருங்கள், அனைத்தையும் சரிசெய்து விடலாம் கவலைப்பட வேண்டாம் என உற்சாகப்படுத்தியுள்ளார்.
தேர்தலின்போது எதையும் செய்யாமல் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த சசிகலா, தேர்தலில் அதிமுகவும் அமமுகவும் தோல்வியடைந்த நிலையில் அதிமுக மற்றும் அமமுக தொண்டர்களிடம் போனில் பேசுவது என்பது சசிகலா அதிமுகவைக் கைப்பற்றும் வியூகமாகவே கருதப்படுகிறது.
சசிகலாவுக்கு ஆதரவாக சில முன்னாள் அமைச்சர்கள் ஆதரவாக இருந்தாலும் அவர்கள் இப்போது அதிமுகவில் இல்லை. அதிமுக தேர்தலில் படுதோல்வி அடைந்திருந்தால், சசிகலாவின் முயற்சி வெற்றி அடைய வாய்ப்பு இருக்கலாம். ஆனால், 33 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்று பலமான எதிர்க்கட்சியாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி கட்சியில் தனது பிடியை தளராமல் மேலும் இறுக்கமாக்கி வருகிறார். ஓ.பன்னீர்செல்வமும் அவருக்கு நெருக்கடியை கொடுக்கிறார். ஆனால், இவர்கள் இருவருமே சசிகலாவை கட்சிக்குள் சேர்க்கக்கூடாது என்பதிலும் கட்சியை உடைக்கக்கூடது என்பதிலும் உறுதியாக உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அதனால், சசிகலா அதிமுகவைக் கைப்பற்றும் வியூகம் எடப்பாடி பழனிசாமியிடம் எடுபடுமா என்பது போகப்போகத்தான் தெரியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“