வரும் 8ம் தேதி தமிழகம் வரும் சசிகலா தனது வாகனத்தில் அஇஅதிமுக கொடியை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று அதிமுக அமைச்சர்கள் காவல்துறை டிஜிபி- யிடம் மனு அளித்துள்ளனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி. வி . சண்முகம், " சசிகலா சென்னை திரும்புவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், டிஜிபி, முப்படைத் தளபதி என யாரிடம் மனுக் கொடுத்தாலும், அஇஅதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் கட்சி கொடியுடன் தான் சசிகலா தமிழகத்திற்கு வருவார் என்று டிடிவி தினகரன் தெரிவிக்கிறார். மேலும், 100 பேர் மனித வெடிகுண்டாக மாறுவோம் என தினகரன் ஆட்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் , அவர்கள் தீட்டிய சதித் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும், அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என டிஜிபியை சந்தித்து மனு அளித்தோம். அதிமுகவை அபகரிக்க நினைப்பவர்கள் காணாமல் போவார்கள் என்பதே உண்மை அப்படியிருக்கையில் கழகத்தை கைப்பற்றுவதற்கு தயாராகிய சசிகலா அவர்களும் கூடிய விரைவில் அரசியலை விட்டு காணாமல் போய்விடுவார் " என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, டிடிவி தினகரன் தனது ட்விட்டர் குறிப்பில்," சசிகலா அவர்களை வரவேற்க புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மீது அன்பு கொண்ட அனைவரும் மகிழ்ச்சியோடு தயாராகி வரும் நிலையில், அமைச்சர்கள் ஒன்றிரண்டு பேர் ஏன் இந்தளவுக்கு பதற்றமடைகிறார்கள் என்று தெரியவில்லை. நான் பேசியதையெல்லாம் தமது வசதிக்கேற்ப திரித்து அமைச்சர் பதவியிலிருப்பதையும் மறந்து, நிதானமின்றி உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார்கள். அதிகாரத்திலுள்ள இவர்கள் அவிழ்த்துவிடும் கட்டுக்கதைகளையும்,டி.ஜி.பி.யிடம் மீண்டும் மீண்டும்தரும் பொய்புகார்களையும் பார்க்கும்போது சட்டம் ஒழுங்கைச்சீர்குலைக்க இவர்களே எதையாவது செய்துவிட்டு, அம்மா அவர்களின் உண்மைத்தொண்டர்கள் மீது பழி போட சதி செய்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. மேலும், அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கத்தின் மீதான உரிமை தொடர்பாக சசிகலா அவர்களால் தொடரப்பட்டு சென்னை நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கை, வசதியாக மறைத்துவிட்டு இவர்கள் பேசி வருகிறார்கள். இவர்களின் பேச்சையெல்லாம் மக்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத்தொண்டர்களும் முகம் சுழித்தபடி பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் " என்று தெரிவித்தார்.
மருத்துவமனையில இருந்து டிஸ்ஜார்ச் செய்யப்பட்ட சசிகலா அதிமுக கொடி பறந்த காரில் பயணம் செய்தது அதிமுக அமைச்சர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 4ம் தேதி அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக அமைச்சர்கள் சார்பில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.